13.7.16

இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 457,380

நீதித்துறை நடுவர் நீதிமன்றம்¸ பெரம்பலூர்
முன்னிலை: திரு. வி.சுரேஷ்பி.பி.எல்
நீதித்துறை நடுவர்¸ பெரம்பலூர்.
(முழு பொறுப்பு)
2014 -ம் ஆண்டு பிப்ரவரி 01-ஆம் நாள் சனிக்கிழமை
(திருவள்ளுவராண்டு 2044 ஸ்ரீவிஜய வருடம் தை திங்கள் 19-ம் நாள்)
ஆண்டுபட்டிகை வழக்கு எண். 435/2013

அரசுக்காக
காவல் ஆய்வாளர்¸
பெரம்பலூர் காவல்நிலையம்¸
குற்ற எண். 917/13. ------------- குற்றம் முறையிடுபவர்
/எதிர்/
1. முருகன் த/பெ.முனுசாமி
2. சேகர் () ராஜசேகர் த/பெ.ரவி ------------- எதிரிகள்.

01. எதிரிகள் மீதான குற்றச்சாட்டு
1) அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல் - பிரிவு 457 இதச
2) வசிப்பிடத்தில் நுழைந்து திருடுதல் - பிரிவு 380 இதச

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:

02. அரசு தரப்பு வழக்கின் சுருக்கம்
1) 19.08.2013ந் தேதி இரவு வாதி விஜயன் என்பவர் பெரம்பலூர் வெங்டேசபுரத்தில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் எதிரிகள் இருவரும் வாதியின் வீட்டிற்கு சென்று முன்பக்க கதவில் இருந்த பூட்டை உடைத்து வீட்டிற்குள் அத்துமீறி சென்றார்கள். இரும்பு அலமாரியில் வைத்திருந்த 33/4 பவுன் தங்க நகைகள்¸ வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளி அரணாகொடி ஆகியவைகளை எதிரிகள் திருடிச் சென்றுவிட்டார்கள்.

2) வாதி பெரம்பலூர் காவல்நிலையம் சென்று உதவி ஆய்வாளரிடம் புகார் அளித்தார். உதவி ஆய்வாளர் புகாரினை பெற்று நிலைய குற்ற எண்.917/13ல் இதச பிரிவு 457¸ 380ன் கீழ்; முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார். பெரம்பலூர் காவல்நிலைய ஆய்வாளர் வழக்கு சம்பவ இடம் சென்று சாட்சிகள் முன்னிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு பார்வை மகசர் மற்றும் மாதிரி வரைபடம் தயார் செய்தார். பின்னிட்டு பட்டியல் சாட்சிகளை ஆய்வாளர் விசாரித்து குவிமுச பிரிவு 161 வாக்குமூலம் பதிவு செய்தார்.

3) கஞ்சனூர் காவல்நிலைய ஆய்வாளர் காவல் குழுவுடன் 15.10.2013ந் தேதி இரவு 10.30 மணியளவில் அப்பம்பட்டு பேருந்து நிறுத்தத்தில் வாகன தணிக்கையில்இருந்த பொழுது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த எதிரிகளை பிடித்து விசாரிக்க தாமாக முன்வந்து அவர்கள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சிகள் முன்னிலையில் பதிவு செய்தார். இந்த வழக்கு குற்றச் செயல்களையும் ஒப்புக்கொண்டு எதிரிகள் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தது குறித்து பெரம்பலூர் காவல்நிலைய ஆய்வாளருக்கு தகவல் கிடைக்கப்பெற்று எதிரிகள் கஞ்சனூர் காவல்நிலைய வழக்கில் நீதிமன்ற காவலில் இருந்த போது சம்பிரதாய கைது செய்தார். பின்னிட்டு எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு ஆய்வாளர் உட்படுத்தினார். இந்த வழக்கில் எதிரிகளை போலீஸ் காவலில் எடுத்து நிலையத்தில் வைத்து விசாரித்த பொழுது எதிரிகள் இந்த வழக்கு குற்ற சம்பவத்தை ஒப்புக் கொண்டு தாமாக முன்வந்து கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சிகள் முன்னிலையில் ஆய்வாளர் பதிவு செய்தார்.

4) எதிரிகள் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குச் சொத்துகளை சாட்சிகள் முன்னிலையில் கைப்பற்றுதல் மகசர் மூலம் ஆய்வாளர் கைப்பற்றினார். எதிரிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தியுள்ளார். புலன் விசாரணை முடித்து ஆய்வாளர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.
03. வழக்கு கோப்புகளை ஆராய்ந்து இவ்வழக்கு 10.01.2014 ந் தேதியன்று கோப்பிற்கு எடுக்கப்பட்டது. எதிரிகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்பு¸ எதிரிகளுக்கு அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ள வழக்காவணங்களின் நகல்கள் அனைத்தும் குவிமுச பிரிவு 207 - இன் படி இலவசமாக வழங்கப்பட்டது. குற்றம் குறித்து விளக்கி குற்றச்சாட்டுகள் வனைந்து அது பற்றி வினவியபோது எதிரிகள் மறுத்தனர்.
04. அரசு தரப்பில் சாட்சிகள் விசாரிக்க உத்தரவு பிறப்பித்து அ.சா.1 முதல் 4 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அரசுத்தரப்பில் அ.சா.. 1 முதல் 8 சான்றாவணங்கள். அரசு தரப்பில் சான்றுபொருட்கள் எதுவும் குறியீடு செய்யப்படவில்லை. எதிரிகள் தரப்பில் சாட்சிகளோ சான்றாவணங்களோ முன்னிலைப்படுத்தப்படவில்லை.

05. அரசு தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களில் இருந்து எதிரிகளுக்கு பாதகமான சாட்சிய விபரங்களை பிரித்தெடுத்து எதிரிகளிடம் குவிமுச பிரிவு 313(1)() – வின்படி விளக்கி கேள்விகள் கேட்க¸ அதனை ஒப்புக்கொண்டு எதிரிகள் தாங்கள் குற்றவாளிகள் என்றும்¸ தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை அளிக்கவேண்டுமென்றும்¸ தங்கள் தரப்பில் விசாரிக்க சாட்சிகள் இல்லை என்றும் கூறினார்.

06. இருதரப்பு வாதங்களும் கேட்கப்பட்டது. வழக்கு சம்பவம் குறித்து அரசு தரப்பு சாட்சிகள் கோர்வையாக தெளிவுபட சாட்சியம் அளித்துள்ளார்கள் என்றும்¸ எதிரிகளே தங்களது குற்றச் செயல்களை ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்றும்¸ எதிரிகளுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வெண்டுமென்றும் கற்றறிந்த அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். கெட்ட சவகாசத்தால் தவறு செய்துவிட்டார்கள் என்றும்¸ தாங்கள் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்கள் என்றும்¸ தாங்கள் ஏற்கனவே பலமாதங்கள் சிறையில் இருந்துவிட்டார்கள் என்றும்¸ மேலும் சிறை தண்டனை கொடுத்தால் தங்கள் குடும்பத்தை கவனிக்க ஆட்கள் இல்லை என்றும்¸ எனவே மிகக் குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டுமென்றும் எதிரிகள் வாதிட்டார்கள்.

07. அரசு தரப்பில் எதிரிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கிடமின்றி நிருபிக்கப்பட்டுள்ளதா? என்பதை இவ்வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டும்.

08. ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியான அ.சா.1 தனது சாட்சியத்தில் 07.11.2013ந் தேதி மாலை 6.15 மணியளவில் தான் காவல் நிலையம் சென்ற பொழுது அங்கு எதிரிகள் இருந்தார்கள் என்றும்¸ தன்னுடன் சாட்சி கருப்பையா என்பவரும் இருந்தார் என்றும்¸ எதிரிகள் இருவரும் தாமாக தனித்தனியாக குற்றச் செயல்களை ஒப்புக்கொண்டு எவ்வித தூண்டுதலும் இல்லாமல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையினர் தன் முன்னிலையில் பதிவு செய்தனர் என்றும்¸ காவல்துறையினர் வழக்குச் சொத்தான 3 பவுன் தங்க சங்கிலியை மகசர் மூலம் கைப்பற்றினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

09. ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியான அ.சா.2 தனது சாட்சியத்தில் 07.11.2013ந் தேதி மாலை 6.15 மணியளவில் தான் காவல் நிலையம் சென்ற பொழுது அங்கு எதிரிகள் இருந்தார்கள் என்றும்¸ தன்னுடன் சாட்சி கருப்பையா என்பவரும் இருந்தார் என்றும்¸ எதிரிகள் இருவரும் தாமாக தனித்தனியாக குற்றச் செயல்களை ஒப்புக்கொண்டு எவ்வித தூண்டுதலும் இல்லாமல் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தை காவல்துறையினர் தன் முன்னிலையில் பதிவு செய்தனர் என்றும்¸ காவல்துறையினர் வழக்குச் சொத்தான 3 பவுன் தங்க சங்கிலியை மகசர் மூலம் கைப்பற்றினர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

10. ஒப்புதல் வாக்குமூலம் சாட்சிகளான அ.சா.1 மற்றும் 2 ஆகியோர்கள் எவ்வித முரண்பாடும் இல்லாமல் கோர்வையாக சாட்சியம் அளித்துள்ளார்கள். மேலும் ஒப்புதல் வாக்குமூலம் சாட்சிகளான அ.சா.1 மற்றும் 2 ஆகியோர்களின் கூற்றுகளை மறுத்து எதிரிகள் தரப்பில் குறுக்குவிசாரணை எதுவும் செய்யவில்லை.

11. உதவி ஆய்வாளர் அ.சா.3 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது குறித்து சாட்சியம் அளித்துள்ளார். ஆய்வாளர் அ.சா.4 தனது சாட்சியத்தில் ஆய்வாளர் எதிரிகளை கைது செய்தது குறித்தும்¸ ஒப்புதல் வாக்குமூலம் பதிவு செய்தது குறித்தும்¸ வழக்குச் சொத்தை மகசரில் கைப்பற்றியது குறித்தும்¸ புலன் விசாரணை செய்தது குறித்தும் சாட்சியம் அளித்துள்ளார். எதிரிகள் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்ற ஒப்புதல் மனு தாக்கல் செய்து அம்மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எதிரிகளின் குற்ற ஒப்புதலே அவர்களுக்கு எதிரான சிறந்த சாட்சியம் ஆகும். மேலும் குவிமுச பிரிவு 313 விசாரணையில் அ.சா.1 முதல் 4 ஆகியோர்களின் சாட்சியம் உண்மை என்றும்¸ தாங்கள் குற்றவாளிகள் என்றும் எதிரிகள் குறிப்பிட்டுள்ளார்கள். அரசு தரப்பு வழக்கு தகுந்த சாட்சியங்கள் மற்றும் சாண்றாவணங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே எதிரிகள் இதச பிரிவுகள் 457¸ 380ன் கீழ்; குற்றவாளிகள் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

12. எதிரிகளுக்கு அளிக்கவிருக்கும் தண்டனை குறித்து அவர்களிடம் வினவ எதிரிகள் தாங்கள் முதல் குற்றவாளி என்றும்¸ தாங்கள் ஏழை என்றும்¸ தெரியாமல் திருடிவிட்டார்கள் என்றும்¸ தாங்கள் திருந்தி வாழ ஆசைப்படுகிறார்கள் என்றும்¸ தங்களுக்கு மிகக் குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டுமென்றும் கூறினார்கள். எதிரிகளின் வேண்டுகொள் நன்கு பரிசீலிக்கப்பட்டது. முடிவாக 1வது எதிரியை இதச பிரிவு 457 - ன் கீழான குற்றத்திற்கு தண்டித்து 3 மாதங்கள் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ அபராதம் ரூபாய்.50/- விதித்தும்¸ அபராதம் கட்ட தவறினால் ஒரு வாரம் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ 1வது எதிரியை இதச பிரிவு 380 - ன் கீழான குற்றத்திற்கு தண்டித்து 3 மாதங்கள் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ அபராதம் ரூபாய்.50/- விதித்தும்¸ அபராதம் கட்ட தவறினால் ஒரு வாரம் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ 2வது எதிரியை இதச பிரிவு 457 - ன் கீழான குற்றத்திற்கு தண்டித்து 3 மாதங்கள் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ அபராதம் ரூபாய்.50/- விதித்தும்¸ அபராதம் கட்ட தவறினால் ஒரு வாரம் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ 2வது எதிரியை இதச பிரிவு 380 - ன் கீழான குற்றத்திற்கு தண்டித்து 3 மாதங்கள் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும்¸ அபராதம் ரூபாய்.50/- விதித்தும்¸ அபராதம் கட்ட தவறினால் ஒரு வாரம் மெய்காவல் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளிக்கப்படுகிறது. எதிரிகள் மேற்கண்ட தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்படுகிறது. எதிரிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையிலிருந்து அவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்த காலத்தை கழித்துக்கொண்டு மீதி தண்டனை காலம் ஏதேனும் இருப்பின் சிறையில் அனுபவிக்க கு.வி.மு.. பிரிவு 428-ன் கீழ்; உத்தரவிடப்படுகிறது. இவ்வழக்கில் ஒப்படைக்கப்பட்ட வழக்குச் சொத்தினை இடைகால பொறுப்பில் வாதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு காலத்திற்கு பின்பு வாதியே வழக்குச் சொத்துகளை தொடர்ந்து வைத்துக்கொள்ள உத்தரவிடப்படுகிறது. மேல்முறையீட்டு காலத்திற்கு பின்னிட்டு வாதி எழுதிக் கொடுத்த பிணை பத்திரம் ரத்து செய்ய உத்தரவிடப்படுகிறது.



No comments:

Post a Comment