3.7.16

உரிமையியல் நடைமுறை சட்டம் கட்டளை 20 விதி 12

கூடுதல் சார்பு நீதிமன்றம்¸ விருத்தாசலம்.
முன்னிலை: திரு. நா.சுந்தரம்¸ பி.எஸ்.சிபி.எல்
கூடுதல் சார்பு நீதிபதி¸
விருத்தாசலம்.
2015 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 15ம் நாள் செவ்வாய்க்கிழமை.
உரிமையியல் மேல்முறையீட்டு வழக்கு எண்: 4/2015

சித்ரா ... மேல்முறையீட்டாளர்/வாதி
/எதிர்/
உப தலைவர்¸
லித்திவியா சுவிசேஷலூத்தரன்¸
திருச்சபை. கழுதூர் ..... எதிர்மேல்முறையீட்டாளர்/பிரதிவாதிகள்

(திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற
..எண்.171/2003 வழக்கில் 17.12.2014 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரை மற்றும்
தீர்ப்பாணைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு)

சித்ரா வாதி
/எதிர்/
உப தலைவர்¸
லித்திவியா சுவிசேஷலூத்தரன்¸
திருச்சபை. குழுதூர் பிரதிவாதி

வழக்கிலிருந்து முக்கிய குறிப்புகள்:
திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற அ..எண்.171/2003 வழக்கில் 17.12.2014 அன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணையில் பாதிப்பு அடைந்த வாதி இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.

1. தாவா சொத்து வாதிக்கே பாத்தியம் என விளம்பி பிரதிவாதியிடமிருந்து காலியிடமாக சொத்து சுவாதீனம் கிடைக்கும்படிக்கும்¸ தாவா சொத்தில் பிரதிவாதி கட்டியுள்ள கட்டிடத்தை சமூகம் கோர்ட்டாரவர்கள் குறிப்பிடும் ஒரு காலக் கெடுவுக்குள் இடித்துக் கொடுக்கவும்¸ அப்படி இடித்துக் கொடுக்காவிடில் வாதியே தன் சொந்த செலவில் இடித்து அதற்குண்டாகும் செலவை பிரதிவாதியிடமிருந்து வசூல் செய்யும்படிக்கு பிரதிவாதி பேரில் செயலுறுத்துக்கட்டளை பிறப்பிக்கும்படிக்கும்¸ வாதிக்கு பிரதிவாதியால் 2000 முதல் 2003 வரை மகசூல் நஷ்டமாக ரூ.3¸000/- கிடைக்கும் படிக்கும்¸ பிராது தேதி முதல் சொத்து ஒப்புதலாகும் வரை உண்டான காலங்களுக்கான மகசூல் நஷ்டம் சி.பி.சி. ஆர்டர் 20 ரூல் 12-ன் படி தனி நடவடிக்கை மூலம் வாதிக்கு பிரதிவாதியால் கிடைக்கும்படிக்கும்¸ இந்த தாவாவின் செலவுத் தொகைக்கும் விசாரணை நீதிமன்றத்தில் மேல் முறையீட்டாளர்வாதி அசல் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

2. விசாரணை நீதிமன்றத்தில் வாதி தாக்கல் செய்துள்ள வழக்குரையின் விபரம் வருமாறு:
() தாவா சொத்தும் இன்னும் சில சொத்துக்களும் வாதியின் தகப்பனார் இராமநாதனுக்கு பாத்தியமான சொத்துக்களாகும். வழக்குச் சொத்தையும்¸ இன்னும் சில சொத்துக்களைப் பொறுத்தும் சென்ற 04.07.1977-ல் வாதியின் தாயார் மருதாம்பாளுக்கு வாதியின் தகப்பனார் இராமநாதன் ஒரு செட்டில்மெண்ட் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார். மேற்படி செட்டில்மெண்ட் பத்திரமும்¸ வாதியின் தாயாரை திருமணம் செய்ய வேண்டி வாதியின் தகப்பனாரால் ஏற்பட்டதாகும். மேற்படி திருமண காலத்தில் வாதியின் தாயார் மைனராக இருந்ததால் அவருடைய தகப்பனார் பெரியசாமி சேர்வையை கார்டியனாக கண்டு மேற்படி செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி எழுதப்பட்டு 04.07.1977 தேதியில் பதிவும் செய்யப்பட்டுள்ளது. மேற்படி செட்டில்மெண்டில் கண்ட வழக்குச் சொத்தையும்¸ இதர சொத்துக்களையும் செட்டில்மெண்ட் தேதியிலேயே இராமநாதன் பெரியசாமி சேர்வையிடம் சொத்து சுவாதீனத்தை கொடுத்து விட்டார்.
() மேற்படி 04.07.1977 தேதியிட்ட செட்டில்மெண்டில் கண்டுள்ளபடி இராமநாதன் வாதியின் தாயாரை திருமணம் செய்து கொண்டு அவர் மூலம் பிறந்தவரே வாதியாவார். வாதியின் தாயார் உரிய வயதை அடைந்தவுடன் வழக்குச் சொத்தை ஒப்புக்கொண்டு அனுபவித்து வந்தார். இந்நிலையில் வாதியின் தகப்பனாருக்கும்¸ தாயாருக்கும் குடும்பத்தில் பிரச்சினை ஏற்படவே இராமநாதன் வாதியையும்¸ வாதியின் தாயார் மருதாம்பாளையும் 19 ஆண்டுகளுக்கு முன்பு அடித்து வீட்டை விட்டு துரத்தி விட்டார்.
() இந்நிலையில்¸ மேற்படி இராமநாதன் வழக்குச் சொத்தை பல்வேறு நபர்களுக்கு கிரயம் செய்துக் கொடுத்து தற்போது வழக்குச் சொத்து பிரதிவாதியால் கிரயம் பெறப்பட்டு அதில் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. 04.07.1977-ல் செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டுள்ளபடி வழக்குச் சொத்து உள்ளிட்ட அனைத்து சொத்துக்களும் வாதிக்கு பாத்தியமானதாகும். அதை பாராதீனம் செய்ய வாதியின் தகப்பனாருக்கு 04.07.1977 முதல் எவ்வித உரிமையும் கிடையாது. இந்நிலையில்¸ வாதிக்கு மைனர் தெளிந்து செட்டில்மெண்ட் பத்திரம் பற்றி தெரிய வரவே 3 வருடத்திற்குள் இந்த வழக்கை தாக்கல் செய்திருப்பதால் வாதியின் தாவாவும் காலாவதி தோஷத்தால் பாதிக்கப்படவில்லை. தாவா சொத்து விளை நிலமாகும். ஆனால்¸ பிரதிவாதி அதில் கட்டிடம் கட்டியிருப்பதாக தெரிய வருகிறது. வழக்குச் சொத்து வாதிக்கு பாத்தியமான நிலையில் பிரதிவாதி வழக்குச் சொத்துக்கு உரிமையில்லாதவரிடமிருந்து கிரயம் பெற்றிருப்பது சட்டப்படி செல்லதக்கதல்ல. வழக்குச் சொத்தில் சாகுபடி செய்தால் வருடத்திற்கு ரூ.1000/- வரை கிடைக்கும். அந்த வகையில் 2000 முதல் 20003 வரை 3 வருடங்களுக்கு மகசூல் நஷ்டமாக ரூ.3¸000/- வாதிக்கு பிரதிவாதியால் கிடைக்க வேண்டியதாய் உள்ளது.
() எனவே¸ வாதிக்கு வழக்குச் சொத்து காலியிடமாக சொத்து சுவாதீனம் கிடைக்கும்படிக்கும்¸ தாவா சொத்தில் கட்டியுள்ள கட்டிடத்தை கோர்ட்டாரவர்கள் குறிப்பிடும் காலகெடுவுக்குள் இடித்து கொடுக்கவும்¸ அப்படி இடித்து கொடுக்காவிடில் வாதியே தன் சொந்த செலவில் இடித்து அதற்குண்டாகும் செலவை பிரதிவாதியிடமிருந்து வசூல் செய்யும்படிக்கும்¸ பிரதிவாதி பெயரில் உறுத்துக்கட்டளை பிறப்பிக்கும்படிக்கும் வாதிக்கு பிரதிவாதியால் மூன்று வருடத்திற்கு மகசூல் நஷ்டமாக ரூ.3000/- கிடைக்கும்படிக்கும்¸ பிராது தேதி முதல் சொத்து ஒப்புதலாகும் வரை உண்டான காலங்களுக்கு மகசூல் நஷ்டம் சி.பி.சி. ஆர்டர் 20 ரூல் 12 படி தனி நடவடிக்கை மூலம் வாதிக்கு கிடைக்கும் படிக்கும் மற்றும் செலவுத் தொகைக்கும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

3. எதிர்வாதி தாக்கல் செய்துள்ள எதிர் வழக்குரையின் சுருக்கம்:
வழக்குரையில் கூறியுள்ள அம்சங்களை வாதியே மெய்ப்பிக்க கடமைப்பட்டவர். இராமநாதனின் 04.07.1977 ஆம் தேதியிட்ட செட்டில்மெண்ட் பத்திரம் அமுலுக்கு வரவில்லை. அதன்படி மருதாம்பாளோ¸ பெரியசாமியோ வழக்குச் சொத்தை எந்த காலத்திலும் ஒப்புக்கொள்ளவில்லை. அனுபவிக்கவும் இல்லை. நடைமுறைக்கும் வரவில்லை. மேற்படி பத்திரம் செல்லதக்கதல்ல. வழக்கு வாதி ராமநாதனின் மகள் என்பதை இந்த எதிர்வாதி ஒப்புக்கொள்ளவில்லை. அதன்படி எவ்வித உரிமையும் கோர வாதிக்கு உரிமையில்லை. வழக்குச் சொத்து எதிர்வாதி சுவிசேஷ லுத்திரன் சபைக்கே சட்டப்படிக்கும்¸ நியாயப்படிக்கும் பாத்தியமும் அனுபோகமுமானது ஆகும். இந்த எதிர்வாதி சுவி சேஷ லுத்திரன்சபை முன்பாத்தியஸ்தர்கள் தொடர்ந்து சட்டவரையறைக்கு மேற்பட்ட காலமாக வாதி உள்பட எவருக்கும்¸ எதிரிடையாக மிகுந்த பொருட்செலவு செய்து சமயபணி ஆற்றி வருவதால் இதில் வாதி எவ்வித உரிமையும் கோர அருகமல்ல. வழக்குச்சொத்திற்கு நீதிமன்றக் கட்டணம் மதிப்பீடு செய்துள்ளது சரியல்ல. எனவே¸ வாதியின் வழக்கை செலவுத் தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

4. விசாரணை நீதிமன்றத்தில் வனையப்பட்ட எழுவினாக்கள் வருமாறு:
1. வழக்குச் சொத்து தனக்கு பாத்தியப்பட்டது என்று வாதி கூறுவது சரியா?
2. வாதி கோரிய செயல்முறை உறுத்துக்கட்டளை பரிகாரம் கிடைக்கதக்கதா?
3. வாதிக்கு மத்திய கால வரும்படி கிடைக்கதக்கதா?
4. வாதிக்கு வேறு என்ன பரிகாரங்கள் கிடைக்கதக்கது?

5. விசாரணை நீதிமன்றத்தால் தீர்ப்புக்கு முன் வனையப்பட்ட கூடுதல் வழக்கெழு வினாக்கள் பின்வருமாறு:
1. வாதியானவர் ராமநாதன்-மருதாம்பாளுக்கு பிறந்த மகள் இல்லையா?
2. 04.07.1977 தேதியிட்ட வழக்கு செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லதக்கதா? அது ஒரு உயிலா அல்லது செட்டில்மெண்ட் பத்திரமா? அது நடைமுறைக்கு வரவில்லையா?
3. வழக்குச் சொத்தில் பிரதிவாதிக்கு எதிர்நிலை அனுபோக உரிமை சித்தித்துள்ளதா?

6. விசாரணை நீதிமன்றமான திட்டக்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வாதி தரப்பில் வா.சா.1 முதல் வா.சா.13 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. விசாரணை முடிவில்¸ விசாரணை நீதிமன்றத்தில் கூடுதல் எழுவினா 1 முதல் 3 ஆகியவற்றுக்கு வாதிக்கு ஆதரவாக தீர்வளிக்கப்பட்டுள்ளது. எழுவினா 1-க்கு வாதிக்கு ஆதரவாகத் தீர்வளிக்கபடவில்லை. வழக்குச் சொத்து வாதிக்கு பாத்தியமானதல்ல என எழுவினா எண். 1-க்குரிய தீர்வில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே¸ வாதி இவ்வழக்கில் கோரியுள்ளவாறு எந்த பரிகாரமும் வாதிக்கு கிடைக்கதக்கதல்ல என விசாரணை நீதிமன்றம் முடிவு செய்து¸ செலவுத் தொகையுடன் வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணை வழங்கியுள்ளது. மேற்படி தீர்ப்புரை மற்றும் தீர்ப்பாணையில் பாதிப்புஅடைந்த வாதி இந்த மேல்முறையீட்டை தாக்கல் செய்துள்ளார்.

7. மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டுக் குறிப்பாணையின் விபரம் வருமாறு:
() விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புரையும்¸ தீர்ப்பாணையும் ஏற்புடையதல்ல. ரத்து செய்யதக்கதாகும். விசாரணை நீதிமன்றம் பிரதிவாதிகளால் எதிர்வழக்குரையில் சொல்லாததை எல்லாம் தாமாக எடுத்துக்கொண்டு அதனால் தள்ளுபடி செய்தது ஏற்புடையதல்ல. விசாரணை நீதிமன்றம் கூடுதல் வழக்கெழு வினாக்களுக்கு வாதிக்கு சாதகமாக தீர்வு கண்டுவிட்டு வாதியின் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. பிரதிவாதி தரப்பில் அவருடைய வழக்கிற்கு தகுந்த ஆவணங்களோ வாய்மொழி சாட்சியமோ இல்லாத நிலையில் கீழமை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து இருப்பது சரியல்ல. பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எதிர்வழக்குரை மற்றும் சாட்சியத்தை சரிவர புரிந்து கொள்ளாமல் விசாரணை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது. வாதியின் வழக்கில் கண்டுள்ளபடி பரிகாரம் வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்தது சரியல்ல. வா.சா..1-ல் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது. வா.சா..1செட்டில்மெண்ட் பத்திரத்தில் 3-வது நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ள நம்முடைய வாழ்நாளில் நமக்குள் ஏற்படும் சந்ததிகள் இதனடியில் கண்ட சொத்துக்களை சர்வசுதந்திர பாத்தியமாய் அடைந்து கொள்ள வேண்டியது என குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ள நிலையில் வாதி கிரயத்தின் போது பிறக்கவில்லை என்பதால் அவருக்கு தாவா சொத்தில் உரிமை இல்லை என தீர்வு கண்டிருப்பது சட்டப்படி தவறு. வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரத்தில் வாழ்நாளில் பிறக்கும் சந்ததிகள் என்று தான் உள்ளதே தவிர குறிப்பிட்ட கால கெடுவிற்குள் குழந்தை பிறக்க வேண்டுமென்ற நிபந்தனை ஏதுமில்லாத நிலையில் வாதிக்கு சொத்துரிமை இல்லை என வழக்கை தள்ளுபடி செய்தது தவறு. வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரத்தில் 4வது நிபந்தனையாக செட்டில்மெண்ட் சொத்துக்களை பாராதீனம் செய்தாலும் நாம் இருவரும் ஒற்றுமையாக வினியோகம் செய்ய வேண்டியது நம்மில் தனித்து ஒருவருக்கொருவர் செய்யக் கூடாது அப்படி செய்தாலும் அது செல்லதக்கதல்ல என்ற நிபந்தனையின் அடிப்படையில் பி.வா.சா. ராமநாதன் தனித்து கொடுத்த கிரயம் சட்டப்படி செல்லதக்கதல்ல. அதை வா.சா.2 ஆட்சேபணை செய்திருக்க வேண்டும் என வழக்கில் சம்மந்தமே இல்லாத எதிர்வழக்குரையோ¸ சாட்சியமோ¸ வாதுரையோ இல்லாமல் கீழமை நிதிமன்றம் தன்னிச்சையாக ஒரு காரணத்தை கண்டு தள்ளுபடி செய்தது தவறு. வாதி தாக்கல் செய்த வா.சா..1-ல் கண்டுள்ள நிபந்தனைகளை சரிவர புரிந்து கொள்ளாமல் செட்டில்மெண்ட் சொத்து வா.சா.2 மற்றும் பி.வா.சா.-3-ன் ஆயுளுக்கு பிறகு தான் வாதிக்கு கிடைக்க கூடியது என தவறான தீர்வை கண்டு வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்திருப்பது தவறு. வழக்கின் தீர்ப்பு 15.12.2014 அன்று வைக்கப்பட்டிருந்த நிலையில் கீழமை நீதிமன்றம் தாமாக முன் வந்து கூடுதல் வழக்கெழு வினாக்களை வனைந்து உபயதரப்பினருக்கும் தெரிவிக்காமலும் கூடுதல் வழக்கெழு வினாக்கள் சம்மந்தமாக சாட்சியங்களோ ஆவணங்களோ தாக்கல் செய்ய எவ்வித வாய்ப்பும் தராமலும்¸ உரிய விளக்கம் கொடுக்க கால அவகாசம் கொடுக்காமலும் வழக்கை 17.12.2014-ல் தள்ளுபடி செய்தது தவறு சரியல்ல.
() பிரதிவாதிகள் தரப்பில் அவர்களுடைய கட்சியை நிரூபிக்க எந்தவித ஆவணங்களும் சாட்சியங்களும் தாக்கல் செய்யாத நிலையில் பிரதிவாதிகளின் வாய்மொழி சாட்சியத்திற்கு அப்பாற்பட்டு கீழமை நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது தவறு. மேல்முறையீட்டாளர் தேவையெனில் தன்னுடைய கூடுதல் மேல்முறையீட்டு காரணங்களை தாக்கல் செய்யும் உரிமையை இதன் மூலம் ரிசர்வ் செய்து கொள்கிறார். எனவே¸ வழக்குச் சொத்து வாதிக்கு பாத்தியம் என விளம்புகை செய்தும்¸ வாதிக்கு தாவா சொத்தை காலியிடமாக சொத்து சுவாதீனம் கிடைக்கும்படிக்கும்¸ தாவா சொத்தில் உள்ள கட்டிடத்தை சமூகம் கோர்ட்டார்கள் குறிப்பிடும் கால கெடுவிற்குள் இடித்து கொடுக்கும்படிக்கும்¸ அப்படி எதிர்மனுதாரர் இடித்து கொடுக்காவிடில் மேல்முறையீட்டாளரே தன் சொந்த செலவில் கட்டிடத்தை இடித்து அதற்குண்டான செலவை எதிர்மனுதாரரிடமிருந்து வசூல் செய்து கொள்ளும் வகைக்கு எதிர்மனுதாரர்கள் பேரில் செயல்முறை உறுத்துக்கட்டளை பிறப்பிக்கும்படிக்கும்¸ 2000 முதல் 2003-ம் வரையிலான மகசூல் நஷ்டம் தலா வருடம் ஒன்றுக்கு ரூ.1000/- வீதம் ரூ.3¸000/- கிடைக்கும்படிக்கும் பிராது தேதி முதல் சொத்து ஒப்புதலாகும் வரை உண்டான மகசூல் நஷ்டம் கிடைக்கும்படிக்கும்¸ விசாரணை நீதிமன்றத்தின்தீர்ப்புரையும்¸ தீர்ப்பாணையும் ரத்து செய்தும்¸ இந்த மேல்முறையீட்டை அனுமதித்தும்¸ அப்பீல்தாரர்/வாதிக்கு¸ எதிர்மேல்முறையீட்டாளர்களால் செலவுத் தொகை கிடைக்க உத்தரவிட வேண்டியும் தீர்ப்பாக வேண்டும்.

8. இம்மேல்முறையீட்டில் தீர்வுக்குரிய பிரச்சினைகளாக பின்வரும் பிரச்சினைகள் அமைந்துள்ளது.
1. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புரையும்¸ தீர்ப்பாணையும் உறுதி செய்யதக்கதா? அல்லது இம்மேல்முறையீடு அனுமதிக்கதக்கதா?
2. தரப்பினருக்கு உரிய பரிகாரங்கள் எவை?

9. பிரச்சினை எண் 1 க்கு தீர்வு:
விசாரணை நீதிமன்றம் தான் வனைந்த வழக்கெழு வினாக்கள் மற்றும் கூடுதல் வழக்கெழு வினாக்களுக்கு சரியான முறையில் தீர்வு கண்டுள்ளதா என்பதை பார்க்கும் பொழுது¸ விசாரணை நீதிமன்றம் முதலில் தீர்வு கண்ட கூடுதல் வழக்கெழுவினா குறித்து விவாதிக்கையில்¸
1. வாதியானவர் ராமநாதன்-மருதாம்பாளுக்கு பிறந்த மகள் இல்லையா?
என்ற கூடுதல் வழக்கெழு வினாவுக்கு ராமநாதன் மருதாம்பாளுக்கு பிறந்த மகள் தான் வாதி என்று மேல்முறையீட்டாளர்-வாதிக்கு ஆதரவாகவே தீர்வு கண்டுள்ளது. மேல்முறையீட்டாளர்-வாதியின் தாயார் மருதாம்பாளை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக தான் வேறு யாரையும் தான் திருமணம் செய்திருந்ததாகவோ¸ மருதாம்பாளுக்கு வேறு யாருடனாவது தவறான தொடர்பு இருந்ததாகவோ மேல்முறையீட்டாளர்-வாதி தனது தகப்பனார் என்று சொல்லும் பி.சா.3 ராமநாதன் விசாரணை நீதிமன்றத்தில் தனது சாட்சியத்தில் ஏதும் கூறவில்லை. மேலும் குறுக்கு விசாரணையின் ஆரம்பத்தில் மருதாம்பாள் தன் மனைவி இல்லை என்று கூறிய பி.சா.3 ராமநாதன் மருதாம்பாளுக்கு கணவர் தான்தான் என்றும் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளார். மேலும்¸ மேல்முறையீட்டாளர்வாதியின் தாயாரான மருதாம்பாள் வாதியின் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக வாதி தரப்பில் வா.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ளார். வாதியின் சாட்சியம் பி.சா.3 ராமநாதன் தனது குறக்கு விசாரணையில் தான் தான் மேல்முறையீட்டாளர்-வாதியின் கணவர் என்றும் ஒப்புக் கொண்ட சாட்சியம் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் மேற்சொன்னவாறு மேல்முறையீட்டாளர்-வாதி அவரது தாயார் வா.சா.2 மருதாம்பாளுக்கும் பி.சா.3 ராமநாதனுக்கும் பிறந்தவர் தான் என்று விசாரணை நீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது சாட்சியங்கள் சான்றாவணங்களின் படியாகவே அமைந்துள்ளது. மேற்சொன்ன காரணங்களால் மேல்முறையீட்டாளர்-வாதி சித்ரா பி.சா.3 ராமநாதனுக்கும்¸ வா.சா.2 மருதாம்பாளுக்கும் நடந்த சட்டப்படியான திருமணத்தின் மூலம் பிறந்த மகளே என்று விசாரணை நீதிமன்றம் முடிவு கண்டுள்ளது சரியே.

10. இரண்டாவது கூடுதல் வழக்கெழுவான 04.07.1977 தேதியிட்ட வழக்கு செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி செல்லதக்கதா? அது ஒரு உயிலா அல்லது செட்டில்மெண்ட் பத்திரமா? அது நடைமுறைக்கு வரவில்லையா? என்ற வழக்கெழு வினாவுக்கும் விசாரணை நீதிமன்றமானது மேல்முறையீட்டாளர்-வாதிக்கு சாதமாகவே தீர்வு கண்டுள்ளது. அதுகுறித்தான விசாரணை நீதிமன்றத்தின் காரணங்களை பார்க்கையில் வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரத்தில் சாட்சிக் கையொப்பமிட்டுள்ள சாட்சிகளில் ஒருவரான திரு. ஆறுமுகம் வா.சா.3 மேல்முறையீட்டாளர்-வாதி சார்பாக விசாரிக்கப்பட்டுள்ளார். வா.சா..1-ஐ பி.சா.3 ராமநாதன் நிறைவேற்றிக் கொடுத்தார் என்றும் அந்த ஆவணம் தன்னால் தான் எழுதிக் கொடுக்கப்பட்டது என்றும் வா.சா.3 தனது சாட்சியத்தின் வாயிலாக தெளிவாக சொல்லியுள்ளார். ஆக¸ வா.சா..1 ஆவணம் வா.சா.3 மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஆவணம் மறு வருடத்திலேயே ரத்து செய்யப்பட்டு விட்டதாக பி.சா.3 கூறியுள்ள போதிலும்¸ அந்த கூற்றுக்கு எந்த ஆதாரமும் முன்னிலைப்படுத்தப்படவில்லை என்று விசாரணை நீதிமன்றம் சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்களின் படியே சரியாக தீர்வு கண்டுள்ளது. இக்கூற்றை வலுப்படுத்தும் விதமாகவே¸ வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டுள்ளவாறு மேல்முறையீட்டாளர்-வாதியின் தகப்பனார் பி.சா.3 ராமநாதனும்¸ தாயார் வா.சா.2 மருதாம்பாளும் சேர்ந்து செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டுள்ள சொத்து ஒன்றை வா.சா..2 மூலம் கிரையம் கொடுத்துள்ளனர். வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரத்தில் கண்டுள்ளவாறு சொத்துக்களை பி.சா.3 ராமநாதன் தன்னுடைய வாழ்நாளில்¸ தன்னுடன் சேர்ந்து உரிமை மாற்றங்களுக்கு உட்படுத்த வா.சா.2 மருதாம்பாளுக்கு மேற்கண்ட செட்டில்மெண்ட் வாசகங்கள் மூலம் உரிமை அளித்துள்ளார். அந்த உரிமை செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரமாக வா.சா.2 மருதாம்பாளும்¸ பி.சா.3 ராமநாதனும் சேர்ந்து கணபதி என்பவருக்கு கிரையம் கொடுத்தற்கான ஆவணம் தான் வா.சா..2 கிரையப்பத்திரம் ஆகும். ஆக¸ வா.சா..1 செட்டில்மெண்ட் பத்திரம் சட்டப்படி அமுலுக்கு வந்து விட்டது¸ அது சட்டப்படியாக செல்லதக்க ஒன்று தான் என்பதனையும் விசாரணை நீதிமன்றம் சாட்சியங்கள் மற்றும் சான்றாவணங்களின் படியாக தீர்மானித்துள்ளது சரியான முடிவே ஆகும். வா.சா..1 ஆவணத்தின் வாசகங்களின் படியும் அதனை அடிப்படையாகக் கொண்ட வா.சா.2 மருதாம்பாள் மற்றும் அவரது கணவர் பி.சா.3 ராமநாதன் ஆகிய இருவரும் சேர்ந்து எழுதிக் கொடுத்த கிரயப்ப பத்திரமான வா.சா..2 ன் மூலமாகவும் வா.சா..1 ஆவணமானது ஒரு செட்டில்மெண்ட் பத்திரமே என்றும்¸ அது உயில் அல்ல என்றும் விசாரணை நீதிமன்றம் வழக்கெழு வினாவிற்கு தீர்வு கண்டுள்ளதும் சரியே.

11. மூன்றாவது கூடுதல் வழக்கெழுவினாவான வழக்குச் சொத்தில் பிரதிவாதிக்கு எதிர்நிலை அனுபோக உரிமை சித்தித்துள்ளதா? என்பதற்கு விசாரணை நீதிமன்றம்¸ஒரு சொத்தின் மீது ஒருவர். எதிர்நிலை அனுபோக உரிமை கோருவதாக இருந்தால்¸ அச்சொத்தின் உண்மையான உரிமையாளருக்கு எதிராக¸ அவருக்கும் தெரிந்தே¸ வெளிப்படையாக அச்சொத்தை தொடர்ந்து 12 ஆண்டுகள் அனுபவித்திருக்க வேண்டும். வழக்குச் சொத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்றோ¸ யாருடைய உரிமைக்கு எதிராக வழக்குச் சொத்து அனுபவிக்கப்பட்டு வந்தது என்றோ எதிர்வழக்குரையிலும் கூறப்படவில்லை. பிரதிவாதிகள் தரப்பு சாட்சியத்திலும் கூறப்படவில்லை. எனவே¸ வழக்குச் சொத்தில் பிரதிவாதிக்கு எதிர்நிலை அனுபோகம் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படும் வாதம் ஏற்கதக்கதல்ல என இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே¸ வழக்குச் சொத்தில் பிரதிவாதிக்கு எதிர்நிலை அனுபோக உரிமை சித்திக்கவில்லை என கூடுதல் வினா எண்.3-க்கு விடையளிக்கப்படுகிறது“ என்ற காரணத்தை அடிப்படையாகக் கொண்டு தனது முடிவை மேல்முறையீட்டாளர்வாதிக்கு ஆதரவாக தீர்மானித்துள்ளது. இந்த முடிவில் இந்நீதிமன்றம் குறுக்கீடு செய்வதற்கு எவ்வித முகாந்திரமும் விசாரணை நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட சாட்சியங்கள் மற்றும்¸ சான்றாவணங்களில் காணப்படவில்லை.

12. விசாரணை நீதிமன்றம் மேற்சொன்ன மூன்று கூடுதல் எழுவினாக்களுக்கும் மேல்முறையீட்டாளர்-வாதிக்கு ஆதரவாக தீர்மானித்த பின்னர்¸ இவ்வழக்கின் முதல் எழுவினாவாக வனையப்பட்ட
1. வழக்கு சொத்து தனக்கு பாத்தியப்பட்டது என்று வாதி கூறுவது சரியா?”
என்பதற்கு தீர்வு காணும் பொழுது¸ விசாரணை நீதிமன்றம் மேல்முறையீட்டாளர்-வாதி வா.சா.2 மருதாம்பாளுக்கும் பி.சா.3 ராமநாதனுக்கும் பிறந்த மகள் தான் என்றும்¸ மேல்முறையீட்டாளர்-வாதி தனது பிறந்த தேதியாக 03-06-1983 என்று சாட்சியமளித்து தனது பள்ளி மாற்றுச் சான்றிதழை தாக்கல் செய்து குறியீடு செய்துள்ளதாலும்¸ அந்த
தேதி பொய்யானது என்று நீருபிப்பதற்கு எவ்வித சாட்சியங்களும் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிறுத்தப்படாத நிலையில்¸ மேல்முறையீட்டாளர்-வாதியின் பிறந்த தேதி 03-06-1983 தான் என்று தீர்மானித்தும்¸ வழக்குச் சொத்தை பி.சா.3 ராமநாதன் பி.சா..1 ஆவணம் மூலமாக 29-08-1980 அன்று கிரயம் கொடுத்து விட்டார் என்றும் அந்த தேதியில் மேல்முறையீட்டாளர்-வாதி பிறந்திருக்கவில்லை எனவும்¸ ஆகையால் வா.சா..1 தானசெட்டில்மென்ட் பத்திரத்தின் படி மேல்முறையீட்டாளர்-வாதியின் சொத்து விற்கப்பட்டுவிட்டதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும்¸ பி.சா..1 கிரைய ஆவணம் ஏற்பட்ட காலத்தில் மேல்முறையீட்டாளர்-வாதியின் தாயாரான வா.சா.2 மருதாம்பாள் ஆட்சேபித்திருக்கவேண்டும் என்றும்¸ அவ்வாறு ஆட்சேபணை செய்யாததால் பி.சா.3 ராமநாதன் மட்டும் தனித்து வா.சா..1 தானசெட்டில்மென்ட் பத்திரத்திற்கு விரோதமாக எழுதிக் கொடுத்த கிரைய ஆவணம் பி.சா..2 ன் மூலமாக ஏற்படுத்தப்பட்ட கிரைய நடவடிக்கையை சரியான ஒன்று தான் என்றும் தீர்மானித்து¸ பி.சா..1 கிரைய ஆவணம் மூலம் உரிமை மாற்றம் செய்யப்பட்ட வழக்குச் சொத்தில் மேல்முறையீட்டாளர்-வாதிக்கு உரிமை கிடையாது என்று விசாரணை நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

13. இம்மேல்முறையீட்டில் வாதுரைகளின் போது கற்றறிந்த இரு தரப்பு வழக்கறிஞர்களும் வா.சா..1 ஆவணம் ஒரு தானசெட்டில்மென்ட் பத்திரம் தான் என்று வாதிட்டார்கள். கற்றறிந்த எதிர்மேல்முறையீட்டாளர்-பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர் நேர்மையுடன் வா.சா..1 ஒரு தானசெட்டில்மென்ட் பத்திரம் என்று முன்னிறுத்தியே தனது வாதுரைகளை முன்னிறுத்தினார். மேலும்¸ விசாரணை நீதிமன்றம் தனது வழக்கெழு வினாவிற்கு வா.சா..1 ஆவணம் ஒரு தானசெட்டில்மென்ட் பத்திரம் தான் என்ற தீர்வு கண்டிருப்பதை இந்நீதிமன்றமும் மேலே விவாதிக்கப்பட்டவாறு ஏற்றுக்கொண்டுள்ளது. அத்துடன் வா.சா..1 தானசெட்டில்மென்ட் பத்திரத்தின் வாசகங்களின் வழி பார்க்கையில் 'இதனடியில் கண்ட சொத்துக்களில் பாரதீனம் செய்தாலும் நாம் இருவரும் ஒற்றுமையாக வினியோகம் செய்ய வேண்டியது நம்மில் தனித்து ஒருவர்க்கொருவர் செய்யக் கூடாது அப்படி செய்தாலும் அது செல்லத்தகுந்ததல்ல இனி இந்த செட்டில்மென்டு பத்திரத்தை எவ்வித காரணத்தை முன்னிட்டு மாற்றவும்¸ ரத்து செய்யவும் எனக்கு அதிகாரம் இல்லை அப்படி செய்தாலும் அது செல்லத்தகுந்ததல்ல மேல்கண்ட அம்சங்கள் யாவும் நம் திருமணத்திற்கு பின்தான் அமுலுக்கு வரவேண்டியது இந்தபடி என் மன சம்மதத்தில் எழுதி கொடுத்த செட்டில்மெண்டு பத்திரம்”

14. பி.சா.3 ராமநாதன் தனது குறுக்கு விசாரணை சாட்சியத்தில் தான் மேல்முறையீட்டாளர்-வாதியின் தாயார் வா.சா.2 மருதாம்பாளை திருமணம் செய்து கொண்டதையும்¸ அவரிடம் இருந்து முறைப்படியாக விவாகரத்து பெறவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும்¸ வா.சா..1 தானசெட்டில்மென்ட் ஆவணம் நிறைவேற்றப்பட்டதையும்¸ என்ன காரணத்திற்காக வா.சா..1 ஆவணம் நிறைவேற்றப்பட்டது என்பதையும்¸ தனது சாட்சியத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். வா.சா..1 தானசெட்டில்மென்ட் பத்திரத்தில் கண்டுள்ள சொத்துக்கள் குறித்து தான் ஆவணம் எதுவும் எழுதுவதற்கு தனக்கு உரிமை எதுவும் இல்லை என்று பி.சா.3 ராமநாதன் தனது சாட்சியத்தில் எந்த இடத்திலும் கூறவில்லை¸ அது அவரது கட்சியாகவும் இல்லை.

15. ஆக¸ வா.சா..1 ஆவணம் ஒரு தானசெட்டில்மென்ட் பத்திரம் தான் என்பதும்¸ அதன்படியாக மேல்முறையீட்டாளர்-வாதியின் தாயாரான வா.சா.2 மருதாம்பாளும்¸ பி.சா.3 ராமநாதனும் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள் என்பதும்¸ வா.சா..1 ன் படியாக வா.சா..1 ஆவணம் வா.சா.2 மருதாம்பாளின் தகப்பனார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதும் சாட்சியங்களின் வாயிலாக உறுதியாகிறது. இந்நிலையில் பி.சா.3 ராமநாதன் பி.சா..1 ஆவணம் மூலமாக 29-08-1980 அன்று வழக்கு சொத்தை ஒரு சாமிக்கண்ணு சேர்வை என்பவரிடம் கிரயம் கொடுத்து விட்டார். அன்றைய தேதி வரை¸ வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரம் உயிர்ப்புடன் தான் இருந்து வருகிறது¸ ஏனெனில் வா.சா..1 ஆவணம் ஒரு மோசடி ஆவணம் என்றோ அல்லது அதை ரத்து செய்ய வேண்டியோ அல்லது அந்த ஆவணம் தன்னை கட்டுப்படுத்தாது என்றோ பி.சா.3 ராமநாதன் உரிய நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பரிகாரம் எதுவும் பெற்றதாக எதுவுமில்லை.

16. அவ்வாறே பி.சா.3 ராமநாதனும் தனது கட்சியாக தனது சாட்சியத்தில் முன்னிறுத்தவில்லை. வா.சா..1 ஆவணத்தில் காரண காரியங்கள் மிக தெளிவாக எழுதப்பட்டுள்ள நிலையிலும்¸ ஆவணம் ரத்து செய்ய முடியாத ஒன்று தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் பி.சா.3 ராமநாதன் தாமாக தனித்து வழக்குச் சொத்தை உரிமை மாற்றம் செய்த ஆவணமான பி.சா..1 கிரைய பத்திரம்¸ வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தையும் அதில் கண்டுள்ள சொத்துக்களையும் எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது. இதற்கு வலு சேர்க்கும் விதமாகவே¸ பி.சா.3 ராமநாதனின் சாட்சியம் அமைந்துள்ளது. அதாவது பி.சா..1 ஏற்பட்ட காலத்தில் வா.சா.2 மருதாம்பாளுக்கும்¸ பி.சா.3 ராமநாதனுக்கும் உள்ள திருமண உறவு அற்றுப்போய்விட்டதாக சாட்சியம் எதுவும் விசாரணை நீதிமன்றத்தில் பிரதிவாதிகள் தரப்பில் முன்னிறுத்தப்படாத சூழ்நிலையில்¸ பி.சா..1 ஆவண காலத்திலும் வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரம் உயிர்ப்புடனே இருந்துள்ளது. ஆக¸ பி.சா.3 ராமநாதன் தாமாக தனித்து வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்திற்கு விரோதமாக வழக்குச் சொத்தை உரிமை மாற்றம் செய்த ஆவணமான பி.சா..1 கிரைய பத்திரம்¸ வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தையும் அதில் கண்டுள்ள சொத்துக்களையும் எவ்வகையிலும் கட்டுப்படுத்தாது என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

17. விசாரணை நீதிமன்றம் வா.சா..1 தானசெட்டில்மென்ட் பத்திரத்தில் 'நம்முடைய வாழ்நாளில் நமக்குள் ஏற்படும் சந்ததிகள்" இதனடியில் கண்டச் சொத்துக்களை சர்வ சுதந்திரமாய்¸ சமபாகமாய் அடைந்து கொள்ள வேண்டியது அப்படி ஒருக்கால் சந்ததிகள் இல்லாவிடில் 'நம் இருவர் ஆயுளுக்குப் பிறகு என்னுடைய வாரிசுதாரர்கள் அடைய வேண்டியது" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்¸ மருதாம்பாளும் மற்றும் ராமநாதனும் உயிருடன் இருப்பதால் அவர்களுடைய வாழ்நாள் இன்னும் முடியவில்லை என்றும் மேற்கண்ட செட்டில்மெண்டின் இரு சரத்துகளையும் சேர்த்து படிக்கும்போது செட்டில்மெண்ட் தரப்பினர்களின் வாழ்நாளுக்குப் பிறகே அவர்களுடைய வாரிசுகள் சொத்துக்களை சமபாகமாய் அடைய வேண்டுமென்றே பொருள் கொள்ளும் விதமாக மேற்கண்ட சரத்துகள் அமைந்துள்ளன என்று தவறாக ஆவணத்தின் வாசகங்களை புரிந்து கொண்டு தீர்மானித்துள்ளது. மருதாம்பாளுக்கும் ராமநாதனுக்கும் வாரிசுகள் இல்லாத சூழ்நிலையில் ராமநாதனின் வாரிசுகள் மருதாம்பாள் மற்றும் ராமநாதன் ஆயுளுக்குப பிறகு தான செட்டில்மென்ட்டில் கண்டுள்ள சொத்துக்களை அடைந்து கொள்ள வேண்டியது என்பது ராமநாதனின் பெற்றோர்¸ உடன் பிறந்தோர்¸ வாயிலாக வரும் வாரிசுகளுக்கே வா.சா..1 ல் கண்டுள்ள சொத்துக்கள் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

18. ஆனால்¸ இந்த வழக்கில் மருதாம்பாளுக்கும்¸ ராமநாதனுக்கும் ஏற்பட்ட திருமண உறவு முறையாக நீக்கரவு செய்யப்படாமல் தொடர்ந்து வருகின்ற நிலையிலும்¸ அவர்களுக்கு பிறந்தவர் தான் மேல்முறையீட்டாளர்-வாதி என்று இந்நீதிமன்றம் தீர்வு கண்டுள்ள நிலையிலும் வழக்குச் சொத்து குறித்த உரிமை மாற்றம் ஏற்பட்ட ஆவணங்கள் வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தையும் அதில் கண்டுள்ள சொத்துக்களையும் கட்டுப்படுத்தாது என்று முடிவு கண்டுள்ள நிலையிலும் மேல்முறையீட்டாளர்-வாதிக்குத் தான் வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தின் படி வழக்குச் சொத்துக்களுக்கு உரிமையானவர் என்று இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.

19. கற்றறிந்த எதிர்மேல்முறையீட்டாளர்-பிரதிவாதிகளின் வழக்கறிஞர் தனது தரப்பிலான வாதுரையின் பொழுது கீழ்க்கண்ட முன்தீர்ப்புகளை கொடுத்து வாதிட்டார். R. Jamuna Bai – Vs – M.A. Anusuya and 3 others reported in 2001 (2) CTC 277 rendered by our Hon'ble Madras High Court and another case Kali Naicker & 2 – Vs – Jaganathan & 2 reported in 2013 (1) CTC 318 rendered by our Hon'ble Madras High Court. இந்த மேல்முறையீட்டு வழக்கில் வா.சா..1 ஆவணம் ஒரு தான செட்டில்மென்ட் ஆவணம் தான் என்பதையும் அந்த ஆவணத்தையும் மருதாம்பாள் மற்றும் ராமநாதன் திருமணத்திற்கு பிறகு மருதாம்பாளின் தகப்பனார் வசம் வந்து இந்த மேல்முறையீட்டார்-வாதி தனது வழக்காவணமாக தாக்கல் செய்திருப்பதில் இருந்தே வா.சா..1 ஆவணம் நடைமுறைப்படுத்தப்பட்டு அமலுக்கு வந்துவிட்டது என்பதும் ஊர்ஜிதமாகிறது. ஆக¸ மேற்சொன்ன முன்தீர்ப்பானது இவ்வழக்கு பொருண்மைகளுக்கு பொருந்தாது. மற்றொரு முன்தீர்ப்பான Smt. Kanti Devi & Anr – Vs – Poshi Ram reported in 2001 (2) CTC 625 rendered by the Hon'ble Apex Court and another case Dipanwita Roy – Vs – Ronobroto Roy reported in 2014 (6) CTC 791 rendered by Hon'ble Apex Court.

20. இம் மேல்முறையீட்டு வழக்கில் அடிப்படையான அசல் வழக்கில் வாதியின் யாருக்கு பிறந்தவர் என்ற நிலை குறித்து சாட்சியங்கள் எதுவும் முன்னிறுத்தப்படாத நிலையிலும்¸ பிரதிவாதி தங்களின் வாதுரைகளில் எதுவும் எடுத்துரைக்காத நிலையில் மேற்சொன்ன முன்தீர்ப்பானது எதிர்மேல்முறையீட்டாளர்பிரதிவாதி தரப்பிற்கு எவ்வகையிலும் உதவாது

21. மேலே விவாதிக்கப்பட்டவாறு வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தில் கண்டுள்ள இவ்வழக்குச் சொத்திற்கு வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தின் இம்மேல்முறையீட்டாளர்-வாதியே உரிமையானவர் என்றும் இம்மேல்முறையீட்டாளர்-வாதியின் பெற்றோர்களான மருதாம்பாளும் ராமநாதன் இருவருக்கும்¸ அவர்களின் வழியாக வா.சா..1 தான செட்டில்மென்ட் பத்திரத்தில் கண்டுள்ள இவ்வழக்குச் சொத்தில் எவ்வித உரிமை மாற்றங்களும் ஏற்படக்கூடிய ஆவணங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவைகள் சட்டப்படியாக செல்லத்தக்கவைகள் அல்ல என்றும் அவைகள் இம்மேல்முறையீட்டாளரின் வழக்கு சொத்து குறித்தான உரிமைப் பொறுத்து எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது என்றும் இந்நீதிமன்றம் முடிவு காண்கிறது.

22. இறுதியாக¸ விசாரணை நீதிமன்றத்தின் 17-12-2014 தேதியிட்ட தீர்ப்பும் தீர்ப்பாணையும் நீக்கரவு செய்யப்பட்டு மேல்முறையீட்டாளர்வாதியின் இம்மேல்முறையீடு செலவுத் தொகையுடன் அனுமதிக்கப்பட்டு¸
() வழக்குச் சொத்தானது மேல்முறையீட்டாளர்-வாதிக்கு பாத்தியப்பட்டது என்று விளம்புகை செய்தும்¸
() வழக்குச் சொத்தை எதிர்மேல்முறையீட்டாளர்-பிரதிவாதி காலியிடமாக இம்மேல்முறையீட்டாளர்-வாதிக்கு இரண்டு மாத காலத்தில் சுவாதீனம் ஒப்படைப்பு செய்ய வேண்டும்¸ தவறும் பட்சத்தில் வழக்குச் சொத்தில் கண்டுள்ள கட்டிடத்தை இம்மேல்முறையீட்டாளர்-வாதியே இடித்து அதற்குண்டான செலவை எதிர்மேல்முறையீட்டாளர்-பிரதிவாதியிடம் இருந்து வசூல் செய்து கொள்ள வேண்டும் என்று செயல்முறை உறுத்துக்கட்டளை பிறப்பித்தும்¸
() மகசூல் நஷ்டம் குறித்து மேல்முறையீட்டாளர்-வாதி தனியாக மனு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment