14.6.16

ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணம் என்னும் அதன் ஷரத்துகள் எழுதி கொடுக்கப்பட்டவரால் குறிப்பிட்டு மறுக்கப்படுமாயின் உரிய சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படவேண்டும்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்¸ பண்ருட்டி
முன்னிலை: திருமதி.ஏ.உமாமகேஸ்வரி¸ பி.எஸ்ஸி.¸பி.எல்.¸
மாவட்ட உரிமையியல் நீதிபதி¸ பண்ருட்டி
திருவள்ளுவராண்டு 2046¸ மன்மத ஆண்டு¸ சித்திரைத்திங்கள் 10 ஆம் நாள்
2015 ம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 23 ஆம் நாள் வியாழக்கிழமை
அசல் வழக்கு எண்.441 / 1999
துரை ஆசாரி ... வாதி
                                                 /எதிர்/
வேதவல்லி அம்மாள் பிரதிவாதி

வழக்கின் முக்கிய குறிப்புகள்:

இந்த அசல் வழக்கானது வாதி¸ பிரதிவாதிக்கிடையே தாவா சொத்தைப் பொறுத்து 17.12.1998 ஆம் தேதியிட்ட கிரய ஒப்பந்தத்தின் அடிப்படையில்¸ பிரதிவாதி¸ வாதிக்கு நீதிமன்றம் நிர்ணயிக்கும் காலகெடுவிற்குள் கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்துகொடுக்கவேண்டுமெனவும்¸ தவறும்பட்சத்தில் நீதிமன்றமே பிரதிவாதிக்கு பதிலாக கிரயப்பத்திரம் எழுதிக்கொடுக்க வேண்டும் என்றும்¸ மேலும் பிரதிவாதி தாவா சொத்தின் சுவாதீனத்தை வாதியிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும்¸ தவறும்பட்சத்தில் நீதிமன்றம் மூலம் சுவாதீனம் கொடுக்கவேண்டும் என்றும்¸ மற்றும் வழக்கின் செலவுத்தொகை கோரியும் வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2. வழக்குரையின் சுருக்கம்:
தாவா சொத்தானது பிரதிவாதிக்கு பாத்தியமானது. பிரதிவாதி தாவா சொத்தை விற்பதற்காக வாதியை அணுகி கேட்டபோது¸ வாதி தாவா சொத்தை கிரயம் வாங்கிக்கொள்வதாக ஒப்புக்கொண்டதின்பேரில்¸ பிரதிவாதி தாவா சொத்தை ரூ.30¸000/- க்கு கிரயம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு¸ முன்பணமாக ரூ.27¸000/- பெற்றுக்கொண்டார். மேலும் வாதியும்¸ பிரதிவாதியும் 17.12.1998 ஆம் தேதி கிரய ஒப்பந்தம் செய்துகொண்டனர். மேற்படி கிரய ஒப்பந்தம் உண்மையானது¸ செல்லத்தக்கது. மேற்படி கிரய ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரதிவாதி¸ கிரய ஒப்பந்த தேதியிலிருந்து ஒரு வருடத்திற்குள் அதாவது 16.12.1999 ஆம் தேதிக்குள் கிரயப்பத்திரம் எழுதிக்கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். மேற்படி கிரய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடந்துகொள்ள வாதி எப்போதும் விருப்பமாகவும்¸ தயாராகவும் இருந்தார். மேலும் வாதி பலமுறை பிரதிவாதியை அணுகி கேட்டபோது அவர் கிரயம் எழுதித்தருவதாக கூறினார். ஆனால் காலம்கடத்தி வந்தார். பின்னிட்டு¸ பிரதிவாதி தாவா சொத்தை வேறு நபருக்கு கிரயம் கொடுக்க நடவடிக்கை எடுத்துவருவது வாதிக்கு தெரியவந்தது. எனவே வாதி 12.11.1999 ஆம் தேதி பிரதிவாதிக்கு வழக்கறிஞர் மூலம் அறிவிப்பு அனுப்பினார். அந்த அறிவிப்பானது Unclaimed என திரும்பி வந்தது. எனவே வாதி மேற்படி கிரய ஒப்பந்தத்தின் அடிப்படையில்¸ ஏற்றதை ஆற்றுக பரிகாரம் கோரி இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.

3. எதிர்வழக்குரையின் சுருக்கம்:
வாதியின் வழக்கு நிலைக்கத்தக்கதல்ல¸ தள்ளுபடிக்குரியது. தாவா சொத்தை இந்த பிரதிவாதி¸ வாதிக்கு ரூ.30¸000/-க்கு கிரயம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு¸ அதற்காக ரூ.27¸000/- முன்பணமாக பெற்றுக்கொண்டு 17.12.1998 ஆம் தேதி கிரய ஒப்பந்தம் எழுதிக்கொடுத்ததாகவும்¸ அந்த கிரய ஒப்பந்தத்தில் ஒருவருட காலத்திற்குள் கிரயப்பத்திரம் எழுதிக்கொடுப்பதாக கண்டு எழுதப்பட்டதாகவும் கூறுவது தவறு. மேலும்¸ வாதி பிரதிவாதியை அணுகி கிரயப்பத்திரம் எழுதிக்கொடுக்குமாறு கேட்டதாக கூறுவதும் தவறு. வாதி மற்றும் பிரதிவாதி ஆகியோரின் மகன்கள் ஒரு நகை திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டு¸ அவ்வழக்கில் ஒரு சுமூக முடிவு ஏற்படுவதற்காக பணம் தேவைப்பட்டதால்¸ பிரதிவாதி¸ வாதியிடம் ரூ.7000/- கடனாக கேட்டார். அதற்கு வாதி¸ தாவா சொத்தை அடமானம் எழுதிக்கொடுத்தால் பணம் தருவதாக ஒப்புக்கொண்டு அதனடிப்படையில்¸ வாதி பிரதிவாதியை பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்து சென்று ¸ பிரதிவாதிக்கு கையெழுத்து மட்டும் போடத்தெரிந்திருந்தும் வேண்டுமென்றே சில பத்திரங்களில் அவரது கைரேகைகளை பெற்றுக்கொண்டு ரூ.7000/-ஐ கொடுத்துள்ளார். பின்னிட்டு¸ பிரதிவாதி அடமானப்பத்திரம் என்று நம்பி கைரேகை வைத்துக்கொடுத்த பத்திரங்களைக் கொண்டு¸ தனது ஆட்களைக் கொண்டு வாதி கிரய ஒப்பந்த பத்திரத்தை உருவாக்கிக்கொண்டார். மேலும் தாவா சொத்தை பிரதிவாதி விற்பதற்காக நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு. மேலும் 12.11.1999 ஆம் தேதி வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியபோது பிரதிவாதி ஊரில் இல்லை. எனவே வாதியின் வழக்கு செலவுத்தொகையுடன் தள்ளுபடி செய்யப்படவேண்டும்.

4. மேற்படி வழக்குரை மற்றும் எதிர்வழக்குரை ஆகியவற்றை பரிசீலனை செய்தபின்னர்
04.01.2001 ஆம் தேதி கீழ்கண்ட எழுவினாக்கள் வனையப்பட்டுள்ளன.
1) 17.12.1998 ஆம் தேதியிட்ட ஒப்பந்தம் உண்மையானதா¸ செல்லத்தக்கதா?
2) வாதிக்கு ஏற்றுதலை ஆற்றுக பரிகாரம் கிடைக்கத்தக்கதா?
3) வாதிக்கு என்ன பரிகாரம் கிடைக்கத்தக்கது?
இந்த வழக்கில் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் எஸ்.ஏ.1683/08-ல் 03.01.2012 ஆம் தேதி பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட அம்சங்கள் சம்மந்தமாக இருதரப்பிலும் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் குறியீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது. அசல் வழக்கில் மீட்டனுப்புகைக்கு முன் வாதி தரப்பில் வா.சா.1 மற்றும் வா.சா.2 ஆகிய சாட்சிகள் விசாரிக்கப்பட்டு¸ வா.சா.ஆ.1 முதல் வா.சா.ஆ.3 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மீட்டனுப்புகைக்கு பின்¸ வாதி தரப்பில் வா.சா.1 மீண்டும் விசாரிக்கப்பட்டு¸ வா.சா.ஆ.4 முதல் வா.சா.ஆ.7 வரையிலான ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் வாதிதரப்பில் வா.சா.3 முதல் விசாரணை மட்டும் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் பிரதிவாதி தரப்பில் மீட்டனுப்புகைக்கு முன் பி.சா.1 சாட்சியாக விசாரிக்கப்பட்டு¸ ஆவணங்கள் ஏதும் குறியீடு செய்யப்படவில்லை. மீட்டனுப்புகைக்கு பிறகு பி.சா.2 சாட்சியாக விசாரிக்கப்பட்டு¸ வா.சா.1-ன் குறுக்கு விசாரணையின்போது பி.சா.ஆ.1 மற்றும் நீ.ம.சா.ஆ.1 ஆகிய ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.

5) எழுவினா எண்.1 மற்றும் கூடுதல் எழுவினா எண்.1 :
இவ்வழக்கு பிரதிவாதி ¸ தனக்கு சொந்தமான தாவா சொத்தான பண்ருட்டி தாலுக்கா நத்தம் கிராம புது சர்வே எண்.61/10 ஹெக்டேர் 1.60.0 ஏர்சில் 0.40.0 ஏர்சைப் பொறுத்து வாதிக்கு 17.12.1998 ஆம் தேதியிட்ட எழுதிக்கொடுத்த கிரய ஒப்பந்தத்தின் அடிப்படையில்¸ கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்து கொடுக்க பிரதிவாதிக்கு உத்தரவிடக்கோரி வாதியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கு கோப்புகளை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ பிரதிவாதிக்கு சொந்தமான தாவா சொத்தை வாதி கிரயம் பெற பிரதிவாதியால் வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் எழுதிக்கொடுக்கப்பட்டு¸ அதன்பேரில் கிரயத்தொகை ரூ.30¸000/- என நிர்ணயம் செய்து கிரய முன்பணம் ரூ.27¸000/- ஐ பிரதிவாதி பெற்றுக்கொண்டதாகவும்¸ பாக்கி கிரயத்தொகையான ரூ.3000/-ஐ 16.12.1999 ஆம் தேதிக்குள் அதாவது ஒருவருட காலக்கெடுவிற்குள் வாதி செலுத்தி கிரயப்பத்திரம் எழுதி பதிவு செய்துகொள்ள தரப்பினர்கள் சம்மதித்ததாகவும்¸ ஆனால் வாதி பலமுறை கேட்டும் பிரதிவாதி கிரயப்பத்திரம் எழுதிக்கொடுக்க தயாராக இல்லாததால் 12.11.1999 ஆம் தேதி வா.சா.ஆ.2 அறிவிப்பை வாதி அனுப்பியதாகவும்¸ அதனை பிரதிவாதி பெற்றுக்கொள்ளாமல் வா.சா.ஆ.3 அஞ்சல் உறையை Not claimed என்ற மேற்குறிப்புடன் திரும்பி வந்ததாகவும்¸ எனவே வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தத்தின்படி பிரதிவாதி கிரயப்பத்திரம் எழுதிக்கொடுக்கவேண்டுமென இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வாதி தரப்பில் கட்சி செய்யப்பட்டுள்ளது. மாறாக பிரதிவாதி தரப்பில் வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் பொய்யானது என்றும்¸ ரூ.30¸000-க்கு கிரயம் பேசி ரூ.27¸000 முன்பணம் பிரதிவாதி பெற்றதாக கூறுவது தவறு என்றும்¸ வா.சா.ஆ.1-ல் பிரதிவாதியின் மகன் சாட்சி போட்டதாக கூறுவது பொய்யானது என்றும்¸ வாதி பிரதிவாதியின் மகன்களின் நகை திருட்டு வழக்கில் சம்மந்தப்பட்டு¸ அதற்காக சமாதானம் செய்துகொள்ள பணம் தேவைப்பட்டதால் வாதியிடம் ரூ.7000 கேட்டதாகவும்¸ அதற்கு வாதி அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்தால் பணம் தருவதாக கூறியதால் பிரதிவாதி அடமான பத்திரம் என நம்பி வாதிக்கு கையெழுத்து போட்டுக்கொடுத்தவிட்டு ரூ.7000 பெற்றதாகவும்¸ ஆனால் அதனை வாதி கிரய ஒப்பந்தமாக மாற்றிக்கொண்டுவிட்டார் என்றும்¸ வாதி அனுப்பிய அறிவிப்பு Unclaimed என திருப்பப்பட்டிருப்பது மறுக்கப்பட்டது Refused என எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது என்றும்¸ அது தவறு என்றும்¸ எனவே வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் கட்சி எடுக்கப்பட்டுள்ளது.

14) இந்த வழக்கில் பிரதிவாதி தரப்பில் மறுக்கப்பட்ட கட்சிகள் என்னவென்றால்¸ வாதி பிரதிவாதியிடையே வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றும்¸ அது அடமானபத்திரம் என்ற அடிப்படையில் படிப்பறிவு இல்லாத பிரதிவாதியால் எழுதித்தரப்பட்டது என்றும்¸ தாவா சொத்து பிரதிவாதிக்கு சொந்தமானதல்ல என்றும்¸ அது கூட்டுக்குடும்ப சொத்து என்றும்¸ அதைப்பொறுத்து பிரதிவாதி கிரய ஒப்பந்தம் எழுதிக்கொடுக்க உரிமைபடைத்த நபர் அல்ல என்றும் கட்சி எடுக்கப்பட்டுள்ளது. வா.சா.ஆ.1-ஐ பரிசீலனை செய்து பார்க்கும்போது அந்த கிரய ஒப்பந்தம் 17.12.1998 ஆம் தேதி எழுதப்பட்டதாக கண்டு¸ 21.12.1998 ஆம் தேதி புதுப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய சாட்சிய சட்டம் பிரிவு.68-ன்படி ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணம் என்னும் அதன் ஷரத்துகள் எழுதிக்கொடுக்கப்பட்டவரால் குறிப்பிட்டு மறுக்கப்படுமாயின் உரிய சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்படவேண்டும் என்பதாகும். மேற்படி கூற்றை வலியுறுத்தி வாதிதரப்பில் CDJ 2006 SC 509 என்ற முன்தீர்ப்பு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாதிதரப்பில் CDJ 2012 MHC 6438, CDJ 1987 SC 438, CDJ 2002 MHC 367 ஆகிய முன்தீர்ப்புகள் முன்னிடப்பட்டது. மேற்படி முன்தீர்ப்புகளில் இந்திய சாட்சிய சட்டம் 92 மற்றும் 68 குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட முன்தீர்ப்புகள் இந்த வழக்கிற்கு பொருந்துவதாகவே அமைந்துள்ளது. வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் பிரதிவாதியால் எழுதிக்கொடுக்கப்படவில்லை என்றும்¸ அடமானபத்திரம் என்று நம்பிதான் பிரதிவாதி கையெழுத்திட்டதாக பிரதிவாதிதரப்பில் கட்சி எடுக்கப்பட்டுள்ள நிலையில்¸ அந்த ஆவணத்தில் சாட்சி கையொப்பமிட்டுள்ள நபர்கள் மூலமாக வா.சா.ஆ.1 குறித்து வாதியால் நிரூபிக்கப்படவேண்டும். ஆனால் அவ்வாறு வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதா என ஆராய்ந்து பார்க்கும்போது¸ வா.சா.ஆ.1-ல் பிரதிவாதியின் மகன் ஒருவரும் மற்றும் ஒருவரும் சாட்சி கையொப்பம் செய்துள்ளதாகவும்¸ அதில் பிரதிவாதியின் மகன் பிரதிவாதிக்கு சாதகமானவர் என்பதால் அவரை சாட்சியாக விசாரிக்க இயலாது என்றும்¸ மற்றொரு சாட்சியான சுப்ரமணியன் யாரென்று விலாசம் தெரியாததால் அவரை விசாரிக்க இயலவில்லை என்றும் மீட்டனுப்புகைக்கு முன்பு வாதிதரப்பில் கட்சி செய்யப்பட்டு¸ வா.சா.ஆ.1-ஐ எழுதிய எழுத்துக்காரரான கோபு என்பவரை வா.சா.2 ஆக விசாரணை செய்துள்ளார். ஆனால் மீட்டனுப்புகைக்கு பின்னர் வா.சா.ஆ.1-ல் சாட்சி கையொப்பமிட்ட சுப்ரமணியன் என்பவரது பிரமாண வாக்குமூலம் வா.சா.3 ஆக வாதிதரப்பில் தாக்கல் செய்யப்பட்டு¸ பின்னிட்டு அவருக்கு நீதிமன்றம் மூலம் சம்மன் சார்வு செய்யப்பட்டு¸ அவர் இறந்துவிட்டார் என்ற அடிப்படையில் அந்த சாட்சியம் முடிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதி தரப்பில்¸ வா.சா.ஆ.1 ல் சாட்சி கையொப்பம் போட்டதாக கூறப்படும் பிரதிவாதியின் மகனான ராமகிருஷ்ணன் என்பவர் பி.சா.2 ஆக விசாரணை செய்யப்பட்டுள்ளார். ஆவரும் வா.சா.ஆ.1-ல் தான் கையொப்பம் போடவில்லை என்று சாட்சியம் அளித்துள்ளார். ஆகவே¸ வாதி தாவா சொத்தை அடமானம் பெறுவதாக சொல்லிதான் தன்னிடம் வா.சா.ஆ.1-ல் கையெழுத்து பெற்றதாகவும்¸ ஆனால் பின்னிட்டு அதனை கிரய ஒப்பந்தமாக தாயார் செய்து மோசடியாக இவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ள பிரதிவாதியின் வாதம் குறித்து ஆராயும்போது¸ இந்த வழக்கில் சந்தர்ப்ப சாட்சிய சூழ்நிலைகளை ஒருசேர பரிசீலிக்கும்போதும்¸ பி.சா.1-ன் சாட்சியத்தை ஆராயும்போதும்¸ மேற்படி வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் பிரதிவாதியால் எழுதிக்கொடுத்திருக்க வாய்ப்பு உள்ளது என்பது தெரியவருகிறது. ஏனெனில்¸ பி.சா.1 தனது சாட்சியத்தில் 'பத்திரம் எழுத சொத்து விபரங்களை நான்தான் கூறினேன். பதிவு அலுவலகத்தில் பதிவாளர் என்னை என்ன பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டாரா என்றால் கேட்கவில்லை" என்று சாட்சியம் அளித்துள்ளதையும்¸ இதற்கு முற்றிலும் மாறாக தனது எதிர்வழக்குரையில்¸ அடமானப்பத்திரம் என்று சொல்லி பிரதிவாதியிடம் கையொப்பம் பெறப்பட்டு¸ பின்னர் கிரய ஒப்பந்த பத்திரமாக வாதியால் மாற்றப்பட்டுவிட்டது என்றும் கூறியுள்ளதை பரிசீலிக்கும்போது¸ பிரதிவாதி முன்னுக்குப்பின் முரணாக முதலில் அடமானபத்திரம் என்று கையொப்பம் பெற்றதாகவும்¸ பின்னர் வேறுவிதமாக மாற்றி கூறியிருப்பதும் தெரியவருகிறது.

15) மேலும் பிரதிவாதிதரப்பில்¸ வாதி பிரதிவாதிகளின் மகன்களின் நகை திருட்டு வழக்கு காரணமாக ரூ.7000 கடன் வாங்கவேண்டி வாதிக்கு அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்ததாக எதிர்வழக்குரையிலும்¸ பி.சா.1-ன் சாட்சியத்திலும் கூறியிருந்தபோதிலும்¸ அந்த நகை திருட்டு சம்மந்தமான ஆவணங்களோ¸ முழுமையான விபரங்களோ இவ்வழக்கில் பிரதிவாதிதரப்பில் எடுத்துரைக்கப்பட்டு அந்த கட்சி நிரூபிக்கப்படவில்லை. மேலும் பி.சா.1 தனது சாட்சியத்தில் முதலில் தான் பதிவு அலுவலகத்திற்கே செல்லவில்லை என்றும்¸ இரண்டு வீடு தள்ளி எழுதி தன்னிடம் கையெழுத்து வாங்கியதாகவும் கூறிவிட்டு¸ ஆனால் பின்னர் பதிவாளர் அலுவலகத்தில் தன்னிடம் எதுவும் கேட்கவில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய எதிர்வழக்குரையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் தன்னிடம் அடமானபத்திரம் என்று கூறிவிட்டு கையெழுத்து வாங்கியதாகவும்¸ ஆனால் அது கிரயப்பத்திரம் என்பதை மறைத்துவிட்டதாக எதிர்வழக்குரையில் கூறியிருப்பதை பார்க்கும்போது¸ வா.சா.ஆ.1 ஆவணம் அதில் கண்ட ஷரத்துப்படி அதாவது கிரய ஒப்பந்தமாகவே பிரதிவாதியால் எழுதிக்கொடுத்திருக்கக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. இந்நிலையில் பிரதிவாதிதரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்பானது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1996(2) MLJ Page199
" Specific Relief Act - Sec.20 - Suit for specific performance - Existence of an agreement, alone is not sufficient to get decree - Court, held can look into surrounding circumstances to see if that agreement was genuine."

மேற்கண்ட முன்தீர்ப்பில் ஏற்றதை ஆற்றுக பரிகார வழக்கில் கிரய ஒப்பந்தம் இருப்பதாலேயே மேற்படி கிரய ஒப்பந்தம் மட்டுமே குறித்தவகை பரிகார தீர்ப்பாணை வழங்க போதுமானதல்ல¸ மேற்படி ஆவணம் எழுதிக்கொடுக்கப்பட்ட சூழ்நிலை மற்றும் அந்த ஆவணம் எழுதப்பட்ட விதத்தையும் கொண்டே நீதிமன்றம் தீர்ப்பாணை வழங்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேற்படி தீர்ப்பின்படி வா.சா.ஆ.1 ஆவணத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையையும்¸ அது எழுதப்பட்ட விதத்தையும் பார்க்கும்போது வா.சா.ஆ.1 ஆவணம் எழுதிக்கொடுத்திருக்க வாய்ப்பில்லை என பிரதிவாதிதரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் மேலே பரிசீலித்த வகையில் ஆவணம் எழுதப்பட்ட விதமும்¸ வாதிதரப்பில் கூறப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலும் வா.சா.ஆ.1 ஆவணம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது. எனவே மேற்கண்ட முன்தீர்ப்பின் அடிப்படையில் பிரதிவாதிதரப்பில் செய்யப்பட்ட வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.

16) மேலும் பிரதிவாதி¸ தான் அடமானப்பத்திரம் என்று வாதி கூறியதன் அடிப்படையில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கையொப்பம் செய்ததாகவும்¸ ஆனால் அது கிரயப்பத்திரம் என்று பின்னிட்டுதான் தெரியவந்தது என்று கட்சி எடுத்துள்ளார். மேலும் மேற்படி பிரதிவாதியின் கூற்றுப்படி பிரதிவாதி வாதிக்கு; அடமானப்பத்திரம் எழுதிக்கொடுத்ததாக வைத்துக்கொண்டாலும்¸ அதிக மதிப்புடைய தாவா சொத்தை ரூ.7000-க்கு அடமானம் எழுதிக்கொடுத்துவிட்டு¸ ஒருவருடத்திற்குள் அதனை மீட்க எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாக கூறவில்லை. மேலும் அவ்வாறு வாதி¸ அடமான பத்திரத்தை கிரய ஒப்பந்தமாக மாற்றிக்கொண்ட விபரம் தெரிந்தபிறகு பிரதிவாதி¸ மேற்படி கிரய ஒப்பந்தம் சம்மந்தமாக வாதி ஏமாற்றியது குறித்து காவல்துறையில் புகாரோ¸ அல்லது பஞ்சாயத்தார் மூலம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவோ¸ அல்லது வாதியிடம் இதுகுறித்து பேசியதாகவோ எந்த இடத்திலும் கூறவில்லை. மேலும்¸ மேற்படி கிரய ஒப்பந்தம் செல்லாது என அறிவிக்கக்கோரி பிரதிவாதி தனிப்பட்ட வழக்கு எதுவும் தாக்கல் செய்ததாகவும் கூறவில்லை. எனவே மேற்படி வாதி¸ தன்னிடம் எழுதி வாங்கியது கிரய ஒப்பந்தம்தான் என்று தெரிந்தபிறகு பிரதிவாதி என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதை இவ்வழக்கில் எந்த இடத்திலும் கூறவில்லை. மேற்கண்ட பரிசீலனைகளின் அடிப்படையில்¸ பிரதிவாதிதரப்பில்¸ பிரதிவாதி தான் கடனுக்காகதான் அடமானம்தான் எழுதிக்கொடுத்ததாகவும்¸ தாவாசொத்தை கிரயம் செய்யும் நோக்கத்தில் வா.சா.ஆ.1-ஐ எழுதிக் கொடுக்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்றே இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது.

18) பிரதிவாதி தரப்பில் தாவா சொத்து பிரதிவாதிக்கு பாத்தியமானதல்ல¸ அது கூட்டுக்குடும்ப சொத்து என்றும்¸ பிரதிவாதியின் கணவரால் பிரதிவாதி பெயரில் பினாமியாக வாங்கப்பட்ட என்றும் பல்வேறுபட்ட கட்சிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அவை குறித்து எதிர்வழக்குரையில் சாட்டுரை எதுவும் எடுக்கப்படவில்லை. மேலும் பிரதிவாதிதரப்பில் தாவா சொத்து பிரதிவாதியின் கூட்டுக்குடும்ப சொத்து என்றும்¸ அது பிரதிவாதியின் குடும்பத்தினரால் பிரதிவாதியின் பினாமியாக பிரதிவாதி பெயரில் வாங்கப்பட்ட சொத்து என்றும்¸ அதனால் பினாமி சொத்தைப் பொறுத்து அவர் எழுதிக்கொடுத்த கிரய ஒப்பந்தம் செல்லாது என்றும்¸ அந்த கிரய ஒப்பந்தம் அவரது குடம்பத்தினரை கட்டுப்படுத்தாது என்றும் வாதிடப்பட்டது. இதுகுறித்து பிரதிவாதிதரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2007(2) MLJ 369.
Benami Transaction - (Prohibition) Act, Sec.3 - Property purchased in the name of the wife - Act carves out an exception to the prohibition of benami transaction if the purchase is made in the name of wife or unmarried daughter.

மேற்படி முன்தீர்ப்பின்படி வா.சா.ஆ.1 ஆவணத்தில் உள்ள சொத்து பினாமி சொத்து என்ற அடிப்படையில் கணவரால்¸ மனைவி பெயரில் வாங்கப்பட்டது¸ அவ்வாறு வாங்கப்பட்ட சொத்து அந்த மனைவியின் சொந்தமான சொத்து அல்ல என்றும்¸ அதனால் இந்த சொத்தைப் பொறுத்து வா.சா.ஆ.1 ஆவணம் பிரதிவாதிதரப்பை கட்டுப்படுத்தாது என்றும் பிரதிவாதிதரப்பில் வாதம் செய்யப்பட்டது. ஆனால் பினாமி சொத்து என்று பிரதிவாதிதரப்பில் செய்யபபட்ட வாதம்¸ தாவா சொத்து எந்த அடிப்படையில்¸ எந்த சூழ்நிலையில்¸ எதற்காக பிரதிவாதி பெயரில் அவரது கணவராலோ அல்லது அவரது குடும்பத்தாராலோ பினாமியாக வாங்கப்பட்டது என்று இந்த பிரதிவாதியால் தெளிவாக தெளிவுபடுத்தப்படவில்லை¸ நிரூபிக்கப்படவுமில்லை. எனவே மேற்கண்ட பொருண்மைகளைக் கொண்ட முன்தீர்ப்பானது பொருந்துவதாக இல்லை என்றே இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது மீட்டனுப்புகைக்கு முன் வா.சா.1 தனது சாட்சியத்தில்¸ தாவா சொத்து பிரதிவாதியின் கணவருக்கு பாத்தியம் என ஒப்புக்கொண்டதன் அடிப்படையில் உரிய தரப்பினரிடம் கிரய ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை என வாதிக்கு எதிராக இந்நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்பில் முடிவு கண்டுள்ள நிலையில்¸ தற்போது வாதிதரப்பில் வா.சா.ஆ.4 ஆவணம் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் குறியீடு செய்யப்பட்டு¸ தாவா சொத்து பிரதிவாதிக்குத்தான் பாத்தியம் என தெளிவுபடுத்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும்¸ பிரதிவாதியின் மகன் ராமகிருஷ்ணன் என்பவர் பி.சா.2 ஆன சாட்சியம் அளித்தபோது¸ தனது சாட்சியத்தில் 'வழக்குசொத்து என் தாயார் பெயரில் உள்ளது. தாவா சொத்து தன் பெயரில் இல்லை என தன் தாயார் ஏற்கனவே சாட்சியம் அளித்திருந்தால் அது தவறு" என சாட்சியம் அளித்திருப்பதை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ தாவா சொத்து பிரதிவாதிக்கு பாத்தியம் என்பது பிரதிவாதிதரப்பிலேயே ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பது தெரியவருகிறது. மேலும் பிரதிவாதிதரப்பில்¸ தாவா சொத்து இருக்கும் ஊருக்கும்¸ வாதி இருக்கும் ஊருக்கும் சுமார் 20 கி.மீ தூரம் இருக்கும் என்றும்¸ எனவே மேற்படி சொத்தை அவரால் பயிர் செய்ய இயலாது என்றும்¸ எனவே மேற்படி தாவா சொத்து கிரயத்திற்காக எழுதிக்கொடுக்கப்படவில்லை என்றும்¸ அது அடமானத்திற்காக மட்டுமே எழுதிக்கொடுக்கப்பட்டது என கட்சி எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ 20 கி.மீ என்பது அதிக தொலைவு கிடையாது என்பதும்¸ மேலும் நம்நாட்டிலுள்ள எந்த நபரும்¸ எந்த ஊரிலும் உள்ள சொத்தை வாங்குவதற்கோ¸ விற்பதற்கோ உரிமை உண்டு என்ற வகையில் வாதி¸ மேற்படி தாவா சொத்தை கிரயத்திற்கு வாங்கவில்லை¸ அடமானத்திற்காக மட்டுமே எழுதிவாங்கினார் என்று கூறும் பிரதிவாதியின் வாதம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இல்லை என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது.

19) மேலும் இவ்வழக்கில் பி.சா.2 ஆக விசாரிக்கப்பட்டுள்ள¸ பிரதிவாதியின் மகனான ராமகிருஷ்ணன் என்பவர் தனது சாட்சியத்தில்¸ வா.சா.ஆ.1-ல் தான் சாட்சி கையொப்பம் செய்யவில்லை என்றும்¸ அதில் இருப்பது தன்னுடைய கையெழுத்து இல்லை என்றும்¸ தன்னுடைய கையெழுத்து போன்று புனையப்பட்ட ஆவணம் என்றும் கூறியுள்ளார். ஆனால்¸ பிரதிவாதி¸ மேற்படி வா.சா.ஆ.1-ல் இருப்பது தன்னுடைய மகனின் கையெழுத்து இல்லை என்பதை நிரூபிக்க அந்த ஆவணத்தை கையெழுத்து நிபுணருக்கு அனுப்பி தன்னுடைய கட்சியை நிரூபிக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் பிரதிவாதிதரப்பில் 2007(4) MLJ Page 58, 1999(11) MLJ Page 606, 1999(11) MLJ Page 769 to 773 ஆகிய முன்தீர்ப்புகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட முன்தீர்ப்புகளில் வழக்கை தாக்கல் செய்த வாதியே அவரது வழக்கை நிரூபிக்கவேண்டும் என்றும்¸ பிரதிவாதிதரப்பிலுள்ள குறைகளை பயன்படுத்திக்கொண்டு கொண்டு தனது தரப்பை நிரூபிக்க முயற்சி செய்யக்கூடாது என கண்டுள்ளது. மேற்கண்ட முன்தீர்ப்பின் பொருண்மைகள் இந்த வழக்கிற்கு பொருந்துவதாக இல்லை. ஏனெனில் மேலே பரிசீலித்த வகையில் வாதிதரப்பில் அவரது கட்சி நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட முன்தீர்ப்பு இவ்வழக்கைப் பொறுத்தவரையில் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. 

20) இந்த வழக்கில் பிரதிவாதிதரப்பில்¸ ஆரம்பம் முதலே முன்னுக்குப்பின் முரணாக பல்வேறு கட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதும்¸ அதன் காரணமாகவே தாவா சொத்து பற்றிய முழு விபரங்களை வாதி தெரிந்துகொள்ளாததால்தான் வாதியின் வழக்குரை கட்சி பாதிக்கப்பட்டு¸ அவர் சென்னை உயர்நீதிமன்றம் வரை செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது. ஒரு சொத்தை வாங்கும் முன் முழு விழிப்புடனும்¸ கவனத்துடனும் இருக்கவேண்டும் Sale of goods சட்டவிதியாகும். அந்த அடிப்படையில் வாதி¸ தாவா சொத்தை உரிய உரிமைபடைத்த நபரிடம் கிரய ஒப்பந்தம் செய்யவில்லை என்றே ஏற்கனவே பிறப்பித்த தீர்ப்புகளில் முடிவு காணப்பட்டுள்ளது. ஆனால் வா.சா.ஆ.4 கிரய ஆவணத்தின் அடிப்படையில் பார்க்கும்போது¸ தாவா சொத்தின் முழு உரிமை படைத்த நபர் பிரதிவாதியே என்பதும்¸ எனவே வாதி உரிய உரிமைபடைத்த நபரிடமே கிரய ஒப்பந்தம் செய்துள்ளார் என்பதும்¸ வாதியை ஏமாற்றவேண்டும் என்ற உள்நோக்கத்துடன் பிரதிவாதி தரப்பினர் பல்வேறு முரண்பட்ட கட்சிகளை எடுத்திருப்பதும் தெளிவாக தெரியவருகிறது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற எஸ்.ஏ.1683/08 தீர்ப்பில் 'Falus in who falsus in omnibus" என்ற Latin Maxim மாண்பமை நீதியரசரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட நீதிமொழியானது இவ்வழக்கின் பிரதிவாதிக்கு மிகவும் பொருந்தக்கூடியதாகவே அமைந்திருப்பதாக இந்நீதிமன்றம் கருதுகிறது. காரணம் மேற்படி இலத்தீன் நீதிமொழியின் கருத்து என்னவெனில் 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்" (False in one thing is false in all things) ஆகும். இந்த வழக்கில் பிரதிவாதி கட்சியை பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ ஆரம்பம் முதலே வாதியின் கட்சியை முறியடிக்கவேண்டி ஒன்றுக்கொன்று முற்றிலும் முரண்பட்ட கட்சிகளை எடுத்திருப்பதும்¸ எந்தவகையிலாவது வாதி வா.சா.ஆ.1 அடிப்படையில் பரிகாரம் அடைந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் கட்சி நடத்திவந்திருப்பதும் தெரியவருகிற நிலையில்¸ மேலே சுட்டிக்காட்டப்பட்ட நீதிமொழியானது பிரதிவாதி கட்சிக்கு பொருந்தக்கூடியதாக அமைந்திருப்பதாகவே இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே மேலே பரிசீலனை செய்தவகையில்¸ தாவா சொத்து பிரதிவாதிக்கு பாத்தியமானது என்பது வா.சா.ஆ.4 ஆவணத்தின் மூலம் வாதிதரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது என கூடுதல் எழுவினாவிற்கு விடை காணப்படுகிறது. மேலும்¸ அச்சொத்தைப் பொறுத்து பிரதிவாதி¸ இந்த வாதிக்கு எழுதிக்கொடுத்த வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் குறித்தும் வாதிதரப்பில் தெளிவுபடுத்தி நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரியவருகிறது. அதன் அடிப்படையில் பார்க்கும்போது¸ தாவா சொத்தைப் பொறுத்து வாதி¸ உரிய உரிமைபடைத்த நபரான பிரதிவாதியிடம் ஏற்படுத்தியிருக்கும் வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் உண்மையானது என்றும்¸ அது செல்லக்கூடியது என்றும் முடிவுசெய்து எழுவினா எண்.1 வாதிக்கு ஆதரவாக தீர்மானிக்கப்படுகிறது.

21) எழுவினா எண்.2 :
எழுவினா எண்.1-ல் வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தம் உண்மையான மற்றும் செல்லத்தக்க ஆவணம் என விடை காணப்பட்டுள்ள நிலையில்¸ வா.சா.ஆ.1-ன் அடிப்படையில் தாவா சொத்தை ரூ.30¸000-க்கு கிரயம் பேசி¸ கிரய ஒப்பந்த தேதியான 17.12.1998 அன்று வாதி ரூ.27¸000-ஐ முன்பணமாக பிரதிவாதியிடம் கொடுத்துள்ளார் என்பதும்¸ கிரய பாக்கியான ரூ.3000/-ஐ இந்தவழக்கை தாக்கல் செய்தபோது லாட்ஜ்மெண்ட் ஷெட்யூல் மூலமாக நீதிமன்ற வைப்பீட்டில் செலுத்த அனுமதிகேட்டு¸ அது 10.12.1999 ஆம் தேதி நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு சலான் எண்.148¸ நாள்.13.12.1999 ஆம் தேதி செலுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது. இதுகுறித்து பரிசீலனை செய்து பார்க்கும்போது¸ வாதி வா.சா.ஆ.1 கிரய ஒப்பந்தப்படி தன்தரப்பு கட்சியை முழுமையாக நிறைவேற்றிக் கொள்ள முனைப்புடனும் தயார் நிலையிலும் (Ready and willing) இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. ஆனால் பிரதிவாதிதரப்பில் கீழ்கண்ட முன்தீர்ப்பு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1996(1) MLJ 566
Specific Performance - Agreement of sale - Plaintiff to prove continuous readings and willingness - Plaintiff to come to court with clean hands.

மேற்கண்ட முன்தீர்ப்பில் வாதி சுத்தமான கரத்துடன் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்றும்¸ ஏற்றதை ஆற்றுக பரிகாரத்திற்கு தயாராகவும்¸ முனைப்புடனும் (Readyness and willingnessதொடர்ச்சியாக இருந்ததை நிரூபிக்கவேண்டும் என கண்டுள்ளது. மேற்கண்ட தீர்ப்பு இந்த வழக்கிற்கு பொருந்துவதாக இல்லை. ஏனெனில் வாதி¸ மேலே பரிசீலித்த வகையில் மீதி கிரயத்தொகையை கொடுத்து கிரயம் செய்துகொள்ள தயாராக இருந்தார் என்று நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் மேற்கண்ட முன்தீர்ப்பானது இவ்வழக்கிற்கு பொருந்துவதாக இல்லை என்றே இந்நீதிமன்றம் கருதுகிறது. மேலும் பிரதிவாதிதரப்பில் தனக்கு வா.சா.ஆ.2 அறிவிப்பு வரவில்லை என்றும்¸ தான் ஊரில் இல்லாதசமயம் வாதி அறிவிப்பை அனுப்பி அது Not claimed என திரும்பிவந்ததாகவும்¸ ஆனால் மேற்படி அறிவிப்பை தான் மறுத்ததாக (Refused) எடுத்துக்கொள்ள இயலாது எனவும் எதிர்வழக்குரையில் கூறியிருந்தாலும்¸ வா.சா.ஆ.1 அடிப்படையில் தன் தரப்பு ஒப்பந்த நிறைவேற்றத்தை செய்ய (Part performance of defendant) என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது பற்றி இவ்வழக்கில் எந்த விளக்கமும் பிரதிவாதிதரப்பில் முன்வைக்கப்படவில்லை. வா.சா.ஆ.1 ஒப்பந்தத்தையே மறுத்துவரும் பிதிவாதியிடம் அவர்தரப்பு ஒப்பந்த நிறைவேற்ற செயல்பாட்டை எதிர்பார்க்க இயலாது. ஏனவேதான்¸ ஒப்பந்தத்திலிருந்து ஒராண்டு காலத்திற்குள் ஒப்பந்தம் பற்றி பலமுறை வாய்மொழியாக கேட்டும் பலனில்லாமல் போனதால் வாதி¸ வா.சா.ஆ.2 அறிவிப்பு அனுப்பி¸ அது வா.சா.ஆ.3 ஆக திரும்பிவந்த நிலையில்¸ வா.சா.ஆ.1 ஒப்பந்தப்படி தன்தரப்பு செயல்பாட்டை அதாவது கிரய பாக்கியை ஒப்பந்த கெடுவிற்குள் அதாவது 16.12.1999 ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் அடிப்படையிலேயே வாதி இந்த வழக்கை வா.சா.ஆ.1 ஒப்பந்த தேதியிலிருந்து ஓராண்டுக்குள்ளாகவே தாக்கல் செய்துள்ளார் என்பது தெரியவருகிற நிலையில்¸ வா.சா.ஆ.1 அடிப்படையில் கிரயப்பத்திரம் எழுதிபெற வாதி முழு உரிமையும் தகுதியும் படைத்தவர் என்று இந்நீதிமன்றம் தீர்மானித்து¸ வாதிக்கு அவர் கோரியபடி ஏற்றதை ஆற்றுக பரிகாரம் கிடைக்கக்கூடியது என எழுவினா எண்.2-க்கு வாதிக்கு ஆதரவாக விடை காணப்படுகிறது.

23) முடிவாக¸ இவ்வழக்கானது அனுமதிக்கப்பட்டு¸ இந்த வழக்கில் வாதி கோரியவாறு ஏற்றுதை ஆற்றுக பரிகாரம் வழங்கி செலவுத்தொகையுடன் தீர்ப்பளித்து தீர்ப்பாணை பிறப்பிக்கப்படுகிறது. கிரயப்பத்திரம் எழுதி பதிவுசெய்து கொடுக்க பிரதிவாதிக்கு 2 மாதகால அவகாசம் அளிக்கப்படுகிறது. தவறும்பட்சத்தில் நீதிமன்றம் மூலம் கிரயப்பத்திரம் எழுதிபெறவும்¸ சொத்து சுவாதீனம் எடுத்துக்கொள்ளவும் வாதிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.



No comments:

Post a Comment