13.6.16

இரு தரப்பினர்கள் தங்களுக்குள் வட்டிதொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள கடமைப்பட்டவர்கள்

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் மணப்பாறை
முன்னிலை திரு.சி.ராஜலிங்கம். பி.ஏ., பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, மணப்பாறை
2015 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 30-ம் நாள் வெள்ளிக்கிழமை
அசல் வழக்கு எண். 351-2010
முத்துவேல் ... வாதி
-எதிர்-
கண்ணம்மாள் ... பிரதிவாதி

வழக்கின் முக்கிய குறிப்புகள்:

வாதியிடம் பிரதிவாதி கடனாக ரூ.70,000/- பெற்றுக்கொண்டதற்கு வட்டியுடன் சேர்த்து செலுத்த வேண்டிய தொகை ரூ.1,54,000/-ல் பிரதிவாதி செலுத்திய ரூ.78,640/- போக மீதத் தொகை ரூ.75,360/-ம். தாவா செலவுத் தொகையும் வாதிக்கு பிரதிவாதி கொடுக்கும்படி உரிமையியல் நடைமுறைச்சட்டம் கட்டளை 7 விதி 1-படி இத்தாவா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1) வாதிதரப்பு வழக்குரையின் சுருக்கம்
பிரதிவாதி வாதியை சந்தித்து தன்னுடைய அவசர குடும்ப பணத்தேவைக்காக கடன்களை தீர்ப்பதற்காகவும் கடன் கேட்டதற்கு வாதியும் சம்மதித்து அதன் பேரில் பிரதிவாதி வாதியிடம் தன்னுடைய சொத்தை வைத்து பணம் கேட்டதால் வாதி ரூ.70,000/- பிரதிவாதிக்கு 11.7.2005ம் தேதி கொடுத்து அதே தேதியி;ல் வாதி பெயருக்கு ஒரு பதிவு செய்யப்பட்ட அடமானப் பத்திரம் எண்.1871-2005 பதிவு செய்யப்பட்டதாகவும் மேற்படி தொகைக்கு பிரதிவாதி 24% வட்டி சேர்த்து 5 வருடத்திற்குள் கொடுத்துவிடுவதாக ஒப்புக்கொண்டதாகவும் மேலும் பிரதிவாதி 11.8.2005ல் ரூ.1,400/- 11.9.2005ல் ரூ.1,400/- 9.9.2005ல் ரூ. 840/- 14.7.2008ல் ரூ.30,000/- 24.5.2009ல் ரூ.30,000/- 18.12.2009ல் ரூ. 15,000/- என மொத்தம் 78.640- வட்டியில் வகை வைத்து கொடுத்துள்ளதாகவும் இருப்பினும் மீதி தொகையை வாதி பலமுறை கேட்டும் செலுத்தாததால் 10.6.2010 அன்று பிரதிவாதி வழக்கறிஞர் மூலம் ஒரு அறிவிப்பை அனுப்பி கால அவகாசம் கேட்டார் என்றும் அதற்கு வாதி 25.6.2010ல் தனது வழக்கறிஞர் மூலம் பதில் கொடுத்ததாகவும் இருப்பினும் தொகையை செலுத்தாததால் இந்த வழக்கு தாக்கல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2) பிரதிவாதி தரப்பு எதிர்வழக்குரையின் சுருக்கம்
எதிர் வழக்குரையில் பிரதிவாதி ஒத்துக்கொண்டவைகளைத் தவிர மற்றவைகளை வாதியே நிரூபிக்க கடமைப்பட்டவர் என்றும் பிரதிவாதி 11.7.2005ம் தேதி வாதியிடம் ரூ.70,000/- பெற்றுக் கொண்டு அதற்கு ஆதரவாக ஈட்டுப்பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளார் என்றும் வாதி வழக்குரையில் ரூ.78,640/- வரவு வந்துள்ளதாகவும். 10.6.2010ம் தேதி வாதி. பிரதிவாதிக்கு வழக்கறிஞர் அறிவிப்பு அனுப்பியுள்ளார் என்று சொல்லியுள்ளதையும் பிரதிவாதி ஒத்துக்கொள்கிறார் என்றும் மேலும் அதிகபட்சமாக ரூ.30,000/- பிரதிவாதியின் மகன் சுப்பிரமணி வாதியிடம் ரொக்கமாக செலுத்தியுள்ளதை வாதி வரவு வைக்கவில்லை என்றும் வாதி ஈட்டுப்பத்திரத்தின் அடிப்படையில் ஆண்டுக்கு 24% வட்டி கணக்கிட்டுள்ளது அரசின் வரம்பு மீறிய அதிகபட்ச வட்டி என்றும் வாதி பிரதிவாதி செலுத்திய தொகைகளை குறிப்பிட்டுள்ளார் ஆனால் அதை அசலுக்கு வரவு வைக்காமல் ஒட்டு மொத்தமாக வட்டி கணக்கிட்டு தாவா தொடர்ந்துள்ளதால் வாதியின் தாவா ஏற்கதக்கதல்ல என்றும் பிரதிவாதி செலுத்திய தொகைகளை சரியான முறையில் வரவு வைத்து அதற்குரிய பயனையும் கழித்து சட்டத்துக்குட்பட்ட வட்டி விகிதத்தின் அடிப்படையில் கணக்கீடு செய்யும் பட்சத்தில் வரக்கூடிய தொகையை பிரதிவாதி ஆறு மாதத்திற்குள் செலுத்தி கணக்கை நேர் செய்து கொள்ள தயாராக உள்ளார் என்றும் ஆனால் வாதி சட்டத்தை மீறிய வட்டி கணக்கீடு செய்துள்ளதாலும் பிரதிவாதி செலுத்திய தொகைகளை சரியான விகிதத்தில் கழிக்காமல் வழக்கை தாக்கல் செய்துள்ளதால் வாதியின் தாவாவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பிரதிவாதி தன்னுடைய எதிர் வழக்குரையில் கூறியுள்ளார். 

3. இவ்வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டிய எழுவினாக்கள் கீழ்க்கண்டவாறு வனையப்பட்டன
1. வாதி தாவாவில் கோரியவாறு கடன் தொகை ரூ.75,360/-ம் அதற்கான வட்டியும் பெறத்தக்கவரா,
2. வாதிக்கு கிடைக்கும் இதர பரிகாரங்கள் என்ன,

4. வழக்கில் வாதி தரப்பில் வா.சா.1 மற்றும் 2 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர் வா.சா.ஆ.1 முதல் 4 வரை ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டன. பிரதிவாதி தரப்பில் பி.சா.1 ஆக பிரதிவாதி சாட்சியமளித்துள்ளார் ஆவணங்கள் எதுவும் குறியீடு செய்யப்படவில்லை.

எழுவினா 1ற்கான விடை
5. இரு தரப்பு வாதுரைகளையும் கேட்ட பின்னர் பிரதிவாதி வாதியிடம் கடனாக ரூ.70,000/- பெற்றுக் கொண்டு 11.7.2005 வா.சா.ஆ1 ஈட்டுக்கடன் பத்திரம் எழுதிக்கொடுத்துள்ளதாக இருதரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டது. வாதிதரப்பில் மேற்படி கடன் தொகைக்கு பிரதிவாதி 24% வட்டி கொடுப்பதாக ஒப்புக்கொண்டதாக கூறுவதை பிரதிவாதி மறுத்துள்ளார் ஆனால் வா.சா.ஆ1 ஆவணத்தி;ல் வட்டி 24% என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

6. வழக்கில் பிரதிவாதி பல்வேறு தவணைகளில் ரூ.78,640/- செலுத்தியதாக வழக்குரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதிவாதியும் அதனை ஒப்புக்கொண்டுள்ளார். தற்போது பிரதிவாதி தரப்பில் பிரதிவாதி பெற்ற கடன் தொகையை 12% வட்டியுடன்தான் திரும்ப செலுத்த கடமைப்பட்டவர் என்றும் பிரதிவாதி ஏற்கனவே செலுத்திய தொகையையும் 12% வட்டி மற்றும் அசல் தொகையில் தான் வரவு வைக்க வேண்டும் என்றும் அதற்கு மாறாக வாதி வழக்கில் கோரியுள்ளவாறு வட்டியில் மட்டுமே பிரதிவாதி செலுத்திய தொகையை கணக்கிட கூடாது என்று கட்சி செய்யப்படுகிறது. வாதி தரப்பில் அதனைக் கடுமையாக ஆட்சேபித்து முதலில் வட்டித்தொகையைத்தான் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும் கூறி தனது கருத்துக்கு
ஆதரவாக (2012) 1 MLJ 641 (SC) என்று பதிவாகியுள்ள மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்புரையை மேற்கோள் காட்டியுள்ளார்

Leela Hotels Ltd. Appellant
Versus
Housing & Urban Development Corporation Ltd. Respondent

என்ற வழக்கின் தீர்ப்புரையை பார்க்கும் போது அதில்

Held: Admittedly, there was no agreement between the parties as to how the amounts to be paid in terms of the Award were to be appropriated by the appellant. Accordingly, in terms of the well settled principle that insuch cases it was for the creditor to appropriate such payment firstly against the interest payable, would, in Court's view, be squarely attracted to the facts of this case.As was laid down by the Privy Council in Meka Venkatadri Appa Rao Bahadur Zamindar Garu and Others V.Raja Parthasarathy Appa Rao Bahadur Zamindar Garu AIR 1922 PC 233, and later reiterated in Rai Bahadur Seth Nemichand V.Seth Radha Kishen AIR 1922 PC 26, when monies are received without a definite appropriation on the one side or the other, the rule which is well established in ordinary cases is that in those circumstances, the money is first applied in payment of interest and when that is satisfied, in payment of the capital. In the latter case, the said principal was restated and it was indicated that a creditor to whom principal and interest are owed is entitled to appropriate any indefinite payment which he gets from a debtor to the payment of intereset. It was also indicated that a debtor might in making a payment stipulate that it was to be applied only towards the principal.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

7. பிரதிவாதி தரப்பில் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் படியான வட்டி என 12% தான் கணக்கிடப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. மேலும் ஒரு கணக்கீட்டுத்தாள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாதி தனி மனிதர் ஆகும். ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமோ வங்கியோ அல்ல. இந்திய ஒப்பந்த சட்டத்தின்படி இரு தரப்பினர்கள் தங்களுக்குள் வட்டிதொடர்பாக ஏற்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள கடமைப்பட்டவர்கள் ஆவர். வா.சா.ஆ.1 ஆவணத்தின் அனைத்து விவரங்களையும் ஒப்புக்கொள்ளும் பிரதிவாதி அதில் குறிப்பிட்டுள்ள வட்டியை மட்டும் படிக்கவில்லை என்றும் அது தனக்கு தெரியாது என்றும் கூறுவது ஏற்கத்தக்கதல்ல. பிரதிவாதிதரப்பில் மேலும் தான் செலுத்திய தொகைகளை அசல் தொகையில் வரவு வைக்க வேண்டும் என்றும் வட்டியில் வரவு வைக்கக்கூடாது என்றும் வாதிடப்பட்டது. ஆனால் மேற்படி இருதரப்பினருக்கிடையே அசல் தொகையை தவணை முறையில் செலுத்துவதாக ஒப்பந்தம் எதுவும் கிடையாது. அவ்வாறு தவணை தொகை குறித்து எதுவும் வா.சா.ஆ.1 ஆவணத்தில் குறிப்பிடப்படவில்லை மேலும் பிரதிவாதி பணம் வாங்கியது முதல் வட்டி தொகையை முறையாக மாதம்தோறும் செலுத்தியதாகவும் கட்சி செய்யவில்லை. அவ்வாறு இருக்கும் போது வாதி தரப்பில் தாக்கல் செய்துள்ள (2012) 1 MLJ 641 (SC) என்ற தீர்ப்புரை இந்த வழக்கு பொருண்மைகளுக்கு பொருந்துவதாகவே உள்ளது. பிரதிவாதி செலுத்திய தொகையில் வட்டி தொகைக்கு அதிகமாக செலுத்தினால் மட்டுமே அசல் தொகையில் அது கழிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த வழக்கில் வாதியின் கணக்கீட்டின்படி 24% வட்டி என்பதால் பிரதிவாதி பணம் செலுத்திய காலங்களில் அவர் செலுத்திய தொகையை விட வட்டி அதிகமாக இருந்துள்ளது தெரியவருகிறது. எனவே வட்டித்தொகையில் பிரதிவாதி செலுத்திய தொகைகள் வரவு வைக்கப்பட்டது சரியானதுதான் என்றே முடிவு செய்யப்படுகிறது.

8. வழக்கில் பிரதிவாதி தரப்பில் வாதிடுவது போல 24% வட்டியுடன் பணத்தை செலுத்துவதாக வா.சா.ஆ.1ல் ஒப்புக் கொண்டுவிட்டு பின்னர் ரிசர்வ் வங்கி விதிமுறைபடி 12% வட்டிதான் கணக்கிடவேண்டும் என வாதிடுவது ஏற்கும்படியாக இல்லை. இதனை தான் (2012) 1 MLJ 641 (SC) என்ற தீர்ப்புரையில் மாண்புமிகு உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளது. மேலும் பிரதிவாதி திரும்ப செலுத்தியுள்ள தொகைக் குறித்து வழக்குரையில் வாதி ஒப்புக் கொண்டுள்ளதாலும் பிரதிவாதி செலுத்த வெண்டிய தொகை விவரத்தையும் வாதி சரியான முறையில் கணக்கிட்டு தாக்கல் செய்துள்ளதாகவே இந்நீதிமன்றம் முடிவு செய்கிறது. எனவே வாதி வழக்குரையில் கோரியுள்ள தொகையை பெற உரிமையுடையவர் என்றே வழக்கெழுவினா எண்.1க்கு விடை காணப்படுகிறது.

வழக்கெழுவினா எண்-2
வாதி பெறத்தக்க இதர பரிகாரங்கள் ஏதும் இல்லை என வழக்கெழு வினா எண்.2-க்கு முடிவு செய்யப்படுகிறது. இறுதியாக வழக்கு செலவுத்தொகையுடன் அனுமதிக்கப்பட்டு பிரதிவாதி வழக்குரை தொகை ரூ75,360/- மற்றும் அசல் தொகை ரூ.70,000/-த்திற்கு வழக்கு தாக்கல் செய்த நாள் முதல் இன்றுவரை 9% வட்டியுடனும் இன்று முதல் தொகை வசூலாகும் வரை 6% வட்டியுடன் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்படுகிறது.


No comments:

Post a Comment