24.5.16

இந்திய வசதியுரிமை சட்டம் 1882 பிரிவு 60 | Section 60 of Indian Easements Act, 1882

மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், புதுக்கோட்டை
முன்னிலை திரு. எஸ். பிரின்ஸ் சாமுவேல் ராஜ்., பி.ஏ.பி.எல்.,
மாவட்ட உரிமையியல் நீதிபதி, புதுக்கோட்டை
2016 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் வெள்ளிக்கிழமை
திருவள்ளுவராண்டு 2047 துர்முகி வருடம் சித்திரை திங்கள் 16 ஆம் நாள்
அசல் வழக்கு எண்: 292/10
1. அரவாயி
2. ராஜேந்திரன்     ………….... வாதிகள்
                                  - எதிராக-
1. அய்யாவு
2. சரஸ்வதி       …………….... பிரதிவாதிகள்

குறிப்புகள்:
“1. தாவா சொத்துக்களில் வாதிகளின் அமைதியான அனுபவத்தினை பிரதிவாதிகளோ, அவரது ஆட்களோ எந்தவிதத்திலும் தடை தகராறு செய்யக்கூடாதென நிரந்தர தடையாணை பரிகாரம் வழங்க கோரியும், வழக்கின் செலவு தொகை கோரியும் வாதியால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.”

“வாதிகள் வழக்குரைஞர் தன்னுடைய வாதத்தில் வழக்குச் சொத்துக்கள் ஆதியில் செல்லன் என்பவர் அனுபவித்து வந்ததாகவும், அவரது இறப்பிற்கு பின்னிட்டு 1ம்வாதியின் கணவரும், 2ம்வாதி தகப்பனாருமான அரவன் அனுபவித்து வந்ததாகவும,; அரவன் பெயருக்கு 1993ல் நத்தம் பட்டா கொடுக்கப்பட்டதாகவும். வா.சா.ஆ. 1. 3 முதல் வா.சா.ஆ.7 வரையிலான ஆவணங்கள் அரவன் பெயரில் உள்ளதாகவும் அவர் இறப்பிற்கு பின்னிட்டு வழக்குச் சொத்தினை, வாதிகள் அனுபவம் செய்துவருவதாகவும், 1ம்வாதிக்கு வா.சா.ஆ.8 பட்டா கொடுக்கப்பட்டதாகவும், வழக்குச் சொத்தில் பிரதிவாதிகளுக்கு எவ்வித பாதையும் கிடையாது என்றும், பிரதிவாதிகள் வழக்குச் சொத்தின் நடுவே தென்வடல் பொது ரோட்ழற்கு சென்று வர அனுமதி கொடுத்திருந்ததாகவும், வழக்குச் சொத்தில் உள்ள செடி, கொடிகளை ஆடு, மாடுகள் சீர்அழிப்பதால் மேற்புறத்தில் வேலி வைத்து அடைக்கப்பட்டுள்ளது எனவும், வா.சா.ஆ.9-ன் மூலம் பிரதிவாதிகள் பாதையை கிரையம் பெற்றுவிட்டதாகவும், எனவே வழக்குச் சொத்தில் பாதை வசதி கோர பிரதிவாதிகளுக்கு உரிமை இல்லை எனவும், எனவே தாவாப்படி தீர்ப்பாக வேண்டும் என்றும் எதிர்கோரிக்கையை தள்ளுபடி செய்யவேண்டும் என்றும் வாதிடப்பட்டது.”

“பிரதிவாதி வழக்குரைஞர் தன்னுடைய வாதத்தில் 2ம்வாதி மற்றும் 1ம்பிரதிவாதியின் முன்னோர்கள் வழக்குச் சொத்தினையும், பிரதிவாதிகளின் சொத்தினையும் பொதுவாக அனுபவித்து வந்ததாகவும், 1983ம் வருடத்தில் பிரதிவாதியின் பெயரில் மின்இணைப்பு பெறப்பட்டதாகவும், வா.சா.ஆ.10, சா.சா.ஆ.2 மற்றும் சா.சா.ஆ.10 ஆகியவைகளில் வழக்குச் சொத்தில் உள்ள வீடும் பிரதவாதிகளின் சொத்துக்களில் உள்ள வீடும் சரிசமமாக தனியாக பிரிக்கப்பட்டு 1993ல் தனித்தனியாக பட்டா வழங்கப்பட்டது என்றும் பிரதிவாதிகளின் முன்னோர்கள் மற்றும் பிரதிவாதிகள் வழக்குச் சொத்தில் உள்ள தென்புறப்பகுதியில் கிழமேலாக உள்ள பகுதியான எதிர்கோரிக்கையில் கூறியுள்ள IFGHI பகுதியின் மூலம் தென்வடல் பொதுப்பாதைக்கு சென்றுவருவதாகவும், அந்த உரிமை தேவையின்பால் அமைந்த வசதியுரிமை எனவும் வாதிக்கு வா.சா.ஆ.9-ன் மூலம் பாதை வசதி இல்லை என்றும், பி.வா.சா.ஆ.1-ன் மூலம் சந்திரசேகர் என்பவருக்கு விற்பனை செய்யப்பட்டது மூலம் அந்த பாதை அடைக்கப்பட்டதாகவும், எனவே வழக்குச் சொத்தின் தென்பகுதியில் உள்ள IFGHI பாதையை தவிர வேறு பாதை இல்லை எனவும் எனவே எதிர்கோரிக்கையை அனுமதித்து வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டுமென்று வாதிட்டார்.”

“10. இருதரப்பும் கேட்கப்பட்டது. இருதரப்பு வாதங்கள் மற்றும் ஆவணங்களை கவனமாக பரிசீலனை செய்ததில் வழக்குச் சொத்தான புல எண்.13-5 வாதிகளுக்கு பாத்தியப்பட்டது என்பதும், வழக்கு சொத்திற்கு கிழக்கே தென்வடல் பொதுபாதை புல எண்.13-11 ல் உள்ளது என்பதும், வழக்குச் சொத்தின் மேற்கே எதிர்கோரிக்கையில் கூறியுள்ள ‘அ’ அட்டவணைச் சொத்து உள்ளது என்பதும் அது பிரதிவாதிகளுக்கு பாத்தியப்பட்ட புல எண்.13-2 என்பதும் இருதரப்பிலும் ஒத்துக்கொள்ளப்பட்டுள்ளது. வாதிகள் தரப்பில் தங்களுடைய சொத்தான வழக்குச் சொத்தில் பாதை எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் வாதிகள் தரப்பில் வழக்குச் சொத்து திறந்தவழியாக இருந்ததால் பிரதிவாதிகள் வழக்குச்சொத்து வழியே சென்று தென்வடல் பொதுபாதைக்கு சென்றுவந்தனர் என்றும், ஆனால் தங்களது செடி, கொடிகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று வேலி வைத்து அடைத்ததாகவும் வாதிகள் தரப்பில் கூறியுள்ளார்கள். எனவே வாதிகள் வழக்குச் சொத்தில் பிரதிவாதிகள் சென்றுவருவதற்கு அளித்துள்ள அனுமதி இந்திய வசதியுரிமை சட்டம் பிரிவு 52-ன் படிக்கு உரிமம் என தெரியவருகிறது. மேலும் மேற்படி உரிமத்தை, வாதிகள் வழக்குச் சொத்தின் மேற்கு புறத்தில் அடைத்து முள்வேலி போட்டதிலிருந்து கொடுக்கப்பட்ட அனுமதியை உட்கிடையாக ரத்துசெய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே மேற்படி அனுமதியை ரத்துசெய்ய வாதிகளுக்கு உரிமை உள்ளதா என பரிசிலனை செய்யவேண்டியுள்ளது. அதன்படிக்கு எப்போது உரிமத்தை ரத்து செய்யலாம் என பிரிவு 60 வசதியுரிமை சட்டம் கூறுகிறது.”

“பிரிவு 60 உரிமம் எப்போது முறித்தறவு செய்யத்தக்கது
(அ) ஒரு சொத்து உரிமை மாற்றம் செய்யப்படும்போது ஓர் உரிமம் இணைக்கப்பட்டிருந்து, அந்த உரிமை மாற்றமானது செல்லாற்றலில் இருந்தாலன்றி
(ஆ) உரிமத்தைப் பெற்றவர் அதன்பேரில் செயல்பட்டு, நிலையான தன்மையுள்ள ஒரு பணியைச் செய்து அதை நிறைவேற்றுகையில் செலவுகள் செய்திருந்தாலன்றி அந்த உரிமம் அதனை வழங்கியவரால் முறித்தறவு செய்யப்படலாம்.”

“இவ்வழக்கில் மேற்படி வழக்குச் சொத்திலுள்ள தென்பகுதியில் நிலையான பணிகள் ஏதும் செய்ததாகவும், அதற்காக செலவுகள் ஏற்பட்டது எனவும் பிரதிவாதிகள் தரப்பில் வாதிடப்படவில்லை. எனவே வாதிகள் உரிமத்தை உட்கிடையாக ரத்துசெய்தது செல்லத்தக்கது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”

“11. பிரதிவாதிகள் தரப்பில் மேற்படி வழக்குச் சொத்தில் உள்ள தென்வடல் IFGHI பகுதியை 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தி வருவதாகவும் மேற்படி வசதியுரிமையானது தேவையின்பால் அமைந்த வசதியுரிமை ( நுயளநஅநவெ டில நேஉநளளவைல) எனவும், எனவே வாதிகள் வழக்குச் சொத்தின் மேற்குபுறத்தில் போடப்பட்டுள்ள வேலியை அகற்றவேண்டுமென்று எதிர்கோரிக்கை தாக்கல் செய்துள்ளனர். எனவே வழக்குச் சொத்தின் தென்பகுதியில் IFGHI பாதை இருந்ததையும, அது தேவையின்பால் அமைந்த வசதியுரிமையின்படிக்கு பிரதிவாதிகளுக்கு உரிமை உள்ளதையும் பிரதிவாதிகள்தான் நிரூபணம் செய்யவேண்டும். தேவையின்பால் அமைந்த வசதியுரிமையை குறித்து வசதியுரிமை சட்டம் பிரிவு 13 கூறுகிறது. 
பிரிவு 13 தேவையான வசதியுரிமைகளும் வசதியுரிமைகள் போன்றவையும.;
ஓர் ஆள் இன்னொருவருக்கு நிலையியல் சொத்தினை உரிமை மாற்றம் செய்கிறவிடத்து,
அல்லது உயில்வழிக்கொடையாக அளிக்கிறவிடத்து,
(அ)...
(ஆ)...
(இ)...
(ஈ)...
பல ஆட்களின் கூட்டுச்சொத்து பங்கு பிரிக்கப்படுகிறவிடத்து
(உ) அவர்களில் ஒருவரின் பங்கின் மீதான வசதியுரிமையானது, அவர்களில் மற்றொருவரின் பங்கைத் துய்ப்பதற்கு தேவைப்படுமானால், அந்தப் பின்னவர் அத்தகைய வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார். அல்லது
(ஊ) அத்தகைய வசதியுரிமையானது, பார்வைக்கு புலனாகிறதாகவும் தொடர்ந்து வருவதாகவும், அவ்வாறு பங்கு பிரிப்பது செல்திறம் பெற்றபோது, அந்தப் பின்னவரின் பங்கு துய்க்கப்பட்டு வந்ததைப்போல அதனைத் துய்ப்பதற்கு தேவையானதாகவும் இருந்தால், மாறுபட்ட உட்கருத்து வெளிப்படுத்தப்பட்டிருந்தாலன்றி அல்லது தேவையானவாறு குறிப்பாலுணர்த்தப்பட்டிருந்தாலன்றி, அப்பின்னவர் அந்த வசதியுரிமைக்கு உரிமை கொண்டவர் ஆவார்.
இந்தப் பிரிவின் (அ), (இ) மற்றும் (உ) கூறுகளில் குறிப்பிட்ட வசதியுரிமைகள், தேவையான வசதியுரிமைகள் என வழங்கப்படும்.”

“சட்டத்தின் செயற்பாட்டால், நிலையியல் சொத்து கைமாறுகிறவிடத்து, அது எந்த ஆட்களிடமிருந்து மற்றும் எந்த ஆட்களுக்கு அவ்வாறு மாறுகிறதோ அந்த ஆட்கள், இந்தப் பிரிவின் நோக்கத்திற்காக, முறையே உரிமை மாற்றம் செய்பவராகவும், உரிமைமாற்றம் பெறுநராகவும் கொள்ளப்படுவர்.”

“மேற்படி பிரிவு 14(உ)-ன் படிக்கு வழக்குச்சொத்து மற்றும் பிரதிவாதிகளின் சொத்துக்கள் ஒரே மூதாதையர்களால் அனுபவிக்கப்பட்டு உள்ளது என்பதையும், அவைகள் பிரித்தபொழுது வழக்குச்சொத்தின் தென்புறத்தில் கிழமேலான IFGHI பாதையின் மூலம் தென்வடல் பொதுப்பாதைக்குச் செல்ல பாதை ஒதுக்கப்பட்டது என்பதையும், பிரதிவாதிகள்தான் நிரூபணம் செய்யவேண்டும். பிரதிவாதிகள் தரப்பில் 2ம்வாதியின் முன்னோர்களும், 1ம்பிரதிவாதியின் முன்னோர்களும் ஒரே தகப்பன் வழி பிறந்த வாரிசுகள் எனவும் ஆகையால் 2ம்வாதியும் 1ம்பிரதிவாதியும் பங்காளிகள் என கூறப்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆனால் மேற்படி உறவுமுறையை நிரூபிப்பதற்கு பிரதிவாதிகள் தரப்பில் எவ்வித சாட்சியங்களும், சான்றாவணங்களும் முன்னிலைப்படுத்தவில்லை. மேலும் 1ம்பிரதிவாதியான வா.சா.1 தன்னுடைய குறுக்குவிசாரணையில் 
“நான் என்னுடைய பிரமாண வழக்குமூலத்தில் புல எண்.13-05 மற்றும் புல எண்13-02 இரண்டையும் உட்பிரிவு செய்யப்படாமல் முன்னோர் ஒருவரால் அனுபவிக்கப்பட்டு வருகிறது என்று சொல்லியிருக்கிறேன். அந்த முன்னோர்கள் யார், யார் என்று பெயரை குறிப்பிட்டு நிரூபண வழக்குமூலத்தில் சொல்லவில்லை. நான் என் எதிர் வழக்குரையிலோ, எதிர்கோரிக்கையிலோ எங்கள் குடும்பத்திற்கும் வாதிகள் குடும்பத்திற்கும் எவ்வாறு உறவு என்பதை காட்ட வம்சாவழியை குறிப்பிடவில்லை”.
என சாட்சியம் அளித்துள்ளார். எனவே முன்னோர்கள் பெயர் எதுவும் குறிப்பிடாமலும், அவர்கள் வாதி, பிரதிவாதிகளுக்கு என்ன உறவுமுறை என்று குறிப்பிடப்படாததிலிருந்தும் அது குறித்து சாட்சியங்கள் ஏதும் முன்னிலை படுத்தாததிலிருந்தும் வாதிகள் மற்றும் பிரதிவாதிகளின் முன்னேர்கள் ஒரே மூதாததையர் என்பதனை பிரதிவாதிகள் தரப்பில் நிரூபிக்கப்படவில்லை என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.”

வா.சா.2 ஆன கிராம நிர்வாக அலுவலர் தனது குறுக்குவிசாரணையில்
“புல எண் 13-2 மற்றும் 13-5 வேறு வேறு நபர்களின் பேரில்தான் உள்ளது. புல எண் 13-ன் புலப்படத்தில் எல்லா வீடுகளுமே வசதிக்காக ஒரே வீடுபோல் தான் வரையப்பட்டுள்ளது என்றால் சரிதான். அந்த புலப்படத்தில் ஒரே வீட்டை இரண்டு உட்பிரிவாக சேர்த்ததாக குறிப்பிட்டு எழுதப்படவில்லை என்றால் சரிதான்”
என சாட்சியம் அளித்துள்ளார்.

பி.வா.சா.2 துணைவட்ட ஆய்வாளர் தன்னுடைய சாட்சியத்தில்
“புலப்படத்தில் ஒரே வீடுகளாக வரைந்திருப்பதால் மட்டுமே அந்த உட்பிரிவுகளில் உள்ளவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றோ, ஒரே வீட்டில் வசிப்பவர்கள் என்றோ சொல்லமுடியாது என்று சொன்னால் சரியாக பதில் சொல்லமுடியாது. இரண்டு புல எண்களில் ஒரே வீடு காட்டப்பட்டுள்ளதால் உறவினர்களா என்று சொல்லமுடியாது என்று சொன்னால் சரிதான்”.
என சாட்சியம் அளித்துள்ளார்.

“நீதிமன்ற ஆணையாளர் தாக்கல் செய்துள்ள நீ.ம.சா.ஆ.1 ஆணையாளர் அறிக்கையில் “தற்போது உள்ள பூஸ்திதி அமைப்பின்படி பாதை போன்ற அமைப்பு இல்லாவிட்டாலும் புல எண் 13-2-க்கு மேற்கில் உள்ள புல எண் 12 வழியாக இந்த பிரதிவாதி பிரதான சாலையை அடைந்துவரும் பாதை ஒத்தையடி பாதையாக தெரிகிறது.”
என கூறியுள்ளார். இதிலிருந்து பிரதிவாதிகளுக்கு வேறு பாதை உள்ளது என்பதும் அதைத்தான் பிரதிவாதிகள் அனுபவித்து வருகிறார்கள் என்பதும் தெரியவருகிறது.”

“மேலும் பிரதிவாதிகள் தரப்பில் வழக்குச் சொத்திலுள்ள பாதையை தவிர வேறு பாதை இல்லை எனவும், வா.சா..2 மற்றும் பி.வா.சா.2ம் தன்னுடைய சாட்சியத்தில் தெரிவித்துள்ளதாக வாதிடப்பட்டது. பி.வா.சா.2-ன் சாட்சியத்தை பரிசீலனை செய்ததில் வா.சா.ஆ.2 தன்னுடைய சாட்சியத்தில் “வருவாய்த்துறை ஆவணங்களின் படி 13-2-க்கு பாதை இல்லை. புல எண்.13-2-க்கு பாதை ஆவணங்களில் காட்டப்படாதற்கு காரணம் என்னால் சொல்லமுடியாது”.
என சாட்சியம் அளித்துள்ளார். மேற்படி சாட்சியத்திலிருந்து வருவாய்த்துறை ஆவணங்களில் பிரதிவாதிகளின் சொத்துகளுக்கு பாதை இல்லை என சாட்சியம் அளிக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. ஆனால் பி.வா.சா.2 ஆவணத்தின் அடிப்படையில் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் நீதிமன்ற ஆணையாளர் பூஸ்த்தி அமைப்பினை பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ததிலிருந்தும் பி.வா.சா.1 தன்னுடைய சாட்சியத்தில் வேறு பாதை சென்றுவருவதை ஒத்துக்கொண்டுள்ளதாலும் வாதிகள் தரப்பில் வேறு பாதை உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது என இந்நீதிமன்றம் தீர்மானிக்கிறது.” 

“முடிவாக தாவா சொத்துக்களில் வாதிகளின் அமைதியான அனுபவத்தினை பிரதிவாதிகளோ, அவர்களது ஆட்களோ எந்தவிதத்திலும் தடை, தகராறு செய்யக்கூடாதென வாதிகள் கோரிய நிரந்தர தடையாணைப்பரிகாரம் வாதிகளுக்கு கிடைக்கதக்கது என தீர்ப்பளித்து வழக்கு செலவு தொகையுடன் அனுமதிக்கப்படுகிறது.”

“முடிவாக 1ம் பிரதிவாதி புல எண்.13-5-ல் உள்ள IFGHI கிழமேல் பாதையை நத்தம்புல எண் 13-2-க்குரிய புலக்கஸ்தலம் என்றும் அது 1ம்பிரதிவாதிக்கு தேவையின்பால் அமைந்த வசதியுரிமையின் மூலம் பாத்தியப்பட்டது என கோரும் விளம்புகை பரிகாரமும் மற்றும் அதனை தொடர்ந்த நிரந்தர உறுத்துக்கட்டளை பரிகாரமும் மற்றும் மேற்படி IFGHI பகுதியில் உள்ள முள்வேலியை அகற்றகோரிய செயலுறுத்துக்கட்டளை பரிகாரமும் 1ம்பிரதிவாதிக்கு கிடைக்கத்தக்கதல்ல என தீர்ப்பளித்து எதிர்கோரிக்கை செலவுதொகையுடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.”
தீர்ப்பை முழுமையாக படிக்க

No comments:

Post a Comment